தன்னை முதன் முதலாக படம் பிடித்த கேமராவை சொந்தமாக்கிய சூப்பர் ஸ்டார்!

தன்னை முதன் முதலாக படம் பிடித்த கேமராவை சொந்தமாக்கிய சூப்பர் ஸ்டார்!

செய்திகள் 21-Aug-2013 12:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாள திரையுலகின் இன்றைய சூப்பர் ஸ்டார் மோகன்லால் முதன் முதலாக கேமராவுக்கு முன் நின்று நடித்த நாள், கடந்த 1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4—ஆம் தேதி! அப்போது மோகன்லாலுக்கு வயது 18 மட்டும்தான்! ‘திரநோட்டம்’ என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய மோகன்லால் முதன் முதலாக நடித்தது, சைக்கிளில் இருந்து கீழே தடுமாறி விழுவது மாதிரியான ஒரு காட்சியில் தான்! ஆனால் அந்த காட்சியில் நடிக்கும்போது மோகன்லால், நாளை தான் ஒரு பெரிய நடிகர் ஆவேன் என்றோ, மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்றோ ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் காலசக்கரம் அவரை இன்று இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஆக்கி விட்டது.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னாடி ’திரநோட்டம்’ என்ற படத்துக்காக தன்னை முதன் முதலாக படம் பிடித்த அந்த கேமராவை மோகன்லால் தற்போது சொந்தமாக்கியிருக்கிறார். மலையாள திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான அந்த கேமராவை தனக்கு தரவேண்டும் என்று சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் கோரிக்கை வைத்திருந்தார் மோகன்லால்! அந்த கோரிக்கையை பரிசீலித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, இப்போது அந்த கேமராவை மோகன்லாலுக்கு வழங்க அனுமதி அளித்துள்ளார்.

இதற்கான நிகழ்ச்சி ஓரிரு நாட்களில் கேரளாவில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ‘திரநோட்டம்’ படத்தில் அன்று மோகன்லால் கூட பணிபுரிந்த இன்றைய பிரபல இயக்குனரான ப்ரியதர்ஷன் உட்பட பலர் பங்கேற்க இருக்கின்றனர். ஆனால் இந்த விழாவில் மோகன்லால் அந்த கேமராவை இலவசமாக பெற விரும்பவில்லை. கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான அந்த கேமராவுக்கு பதிலாக விலை உயர்ந்த அதி நவீன கேமரா ஒன்றை வழங்க இருக்கிறார்!

மோகன்லால் பழமை வாய்ந்த சிற்பங்கள் மற்றும் கலை பொருட்கள் மீது அதீத ஆரவம் கொண்டவர். அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டுடைய பாரம்பரிய சிற்பங்களை, கலை பொருட்களை வாங்கி வந்து தன் வீட்டை அலங்கரிக்கும் ரசனையுடையவர். அந்த வரிசையில் தன்னுடைய வீட்டில் தன்னை முதன் முதலாக படம் பிடித்த கேமராவும் இடம் பெறப் போவதில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் கேரள சூப்பர் ஸ்டார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;