பத்திரிகையாளர் நெல்லை அழகேஷ் மாரடைப்பால் மரணம்!

பத்திரிகையாளர் நெல்லை அழகேஷ் மாரடைப்பால் மரணம்!

செய்திகள் 5-Aug-2013 11:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

திரைப்பட பத்திரிகையாளரும், பத்திரிகை தொடர்பாளருமான நெல்லை அழகேஷ் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 40.

தினமணி, பொம்மை, வண்ணத்திரை, உஷா, மங்கை, சினி விசிட், மியூசிக் வேர்ல்டு, வெளிநாட்டு இதழான உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளில் பகுதி நேர நிருபராக பணியாற்றியவர். ஆனந்த சினிமா மாத இதழின் நிர்வாக ஆசிரியராக பதினைந்து ஆண்டுகள் பணியாற்றி வந்தார். கடந்த ஏழு வருடங்களாக கலைமாமணி அஜீத் மாத இதழிலும் பணிபுரிந்து வந்தார்.

இவன் யாரோ, மண், ஆட்டம், அச்சச்சோ, பிறப்பு, வேள்வி, வசூல், துணிச்சல், கடற்கரை, மின்சாரம், உனக்கே உயிரானேன், திருமண அழைப்பிதழ், இரா, யமுனா போன்ற படங்களில் திரைப்பட மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளார். தற்போது ஆர்.ஷங்கரின் தாண்டவம், ஊராட்சி ஒன்றியம், கரிசல் பட்டியும் காந்தி நகரும் ஆகிய படங்களிலும் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளார்.

ஒரு சில இதழ்களில் கதை, கவிதைகள் எழுதி உள்ள இவர், சினிமா கதை விவாதங்களிலும் பங்கெடுத்து வந்ததோடு, சில குறும் படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

திரைப்படம் இயக்கும் எண்ணத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்தவர் நெல்லை அழகேஷ். இவரது நிஜப் பெயர் அழகிய நம்பி. இதே பெயரில் வானொலியில் ஒருவர் புகழில் இருந்ததால், தனது பெயரை நெல்லை அழகேஷ் என்று மாறி வைத்துக்கொண்டார்.

நெல்லை அழகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை சொந்த ஊரில் நடைபெறும் என தெரிகிறது. .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;