‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’

உடனே கிளம்புங்கள் ‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’ ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படத்திற்கு!

விமர்சனம் 2-Aug-2013 5:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

2011ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் கவர்ந்த ‘தி ஸ்மர்ஃப்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்திருக்கிறது. சின்னஞ்சிறு உருவத்தோடு நீலக் கலரில் பார்ப்பதற்கு பஃபூன் போன்றிருக்கும் ‘ஸ்மர்ஃப்ஸ்’தான் இப்படத்தின் பிரதான கதாபாத்திரம். ஒரு மாய உலகில் வசித்துக்கொண்டிருக்கும் இவை, மந்திரவாதி கர்காமெலின் கண்ணில் பட, அவற்றைத் துரத்திக் கொண்டே செல்கிறான். அவனிடம் தப்பி ஓடும் ‘ஸ்மர்ஃப்ஸ்’, தங்கள் உலகத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் நியூயார்க் சிட்டிக்கு வந்துவிடுகின்றன. அங்கிருக்கும் சில நல்ல மனிதர்களின் உதவியோடு, மந்திரவாதியின் கையில் சிக்காமல் எப்படி மீண்டும் தங்கள் மாய உலகிற்கு ‘ஸ்மர்ஃப்ஸ்’ செல்கிறது என்பதே முதல் பாகத்தின் கதை.

இந்த இரண்டாம் பாகத்தில், மந்திரவாதி கர்காமெல் தன் மந்திர சக்தியால் இரண்டு சாம்பல் நிற ஸ்மர்ஃப்ஸை உருவாக்கி, அதை வைத்து, மாய உலகத்தில் வாழ்ந்து வரும் நீல நிற குட்டி பெண் ஸ்மர்ஃப் ‘ஸ்மர்ஃபட்டி’யைப் பிடித்து சிறைப்படுத்துகிறான். தங்கள் கூட்டத்திலிருந்து காணாமல்போன அந்த ‘ஸ்மர்ஃபட்டி’யைக் கண்டுபிடிப்பதற்காக ‘பப்பா ஸ்மர்ஃப்’ தலைமையில் நான்கு பேர் கொண்ட ‘ஸ்மர்ஃப்’ குழு ஒன்று சிட்டிக்கு வருகிறது. தங்கள் பழைய மனித நண்பர்களான பேட்ரிக் & கிரேஸ் குடும்பத்தின் உதவியோடு, மந்திரவாதி கர்காமெலின் பிடியிலிருக்கும் ‘ஸ்மர்ஃபட்டி’யை மீட்டு, தங்கள் உலகுக்கு மீண்டும் எப்படி செல்கின்றன என்பதே ‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’ படத்தின் கதை.

முழுக்க முழுக்க அனிமேஷனிலேயே உருவாக்காமல், நிஜ மனிதர்களையும் அனிமேஷன் கேரக்டர்களையும் இணைத்து படமாக்கியிருப்பதால், பார்வையாளர்களுக்கு இப்படம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கலாம். கதை சாதாரணமாக இருந்தாலும், குழந்தைகளுக்குப் பிடித்த ஆக்ஷன் திரைப்படமாக இந்த ‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பஃபூன் போன்ற ஸ்மர்ஃப்ஸ் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகள் படம் முழுவதும் ஆங்காங்கே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன. அதிலும் மந்திராவதியால் பாட்ரிக்கின் தாத்தா மனித உருவத்திலிருந்து பறவையாக மாறியதும் படும் அவஸ்தைகள், பெரியவர்களையும் சிரிக்க வைக்கிறது.

குழந்தைகள் ரசிக்கும்படியான ஒரு கேரக்டரை உருவாக்கி, காட்சிக்கேற்ப அதற்கு முகபாவனைகளையும், வசனங்களுக்கேற்ப வாயசைகளையும் அற்புதமாகக் கொடுத்த அனிமேஷன் டீமை நிச்சயம் பாராட்டலாம். அதேபோல், அனிமேஷன் கேரக்டர்களுக்கு ‘வாய்ஸ்’ கொடுத்தவர்களும் தங்கள் வேலையை மிக அற்புதமாகச் செய்திருக்கிறார்கள். முக்கியமாக குட்டி பெண் ‘ஸ்மர்ஃபட்டி’க்கு வாய்ஸ் கொடுத்திருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகை கேட்டி பெர்ரியின் பங்கு அற்புதம்.

மந்திரவாதியாக நடித்திருக்கும் ஹங்க் அஸாரியா, பேட்ரிக்காக நடித்திருக்கும் நீல் பேட்ரிக் ஹாரிஸ், கிரேஸாக நடித்திருக்கும் ஜெய்மா மாய்ஸ், பேட்ரிக்கின் தாத்தாவாக நடித்திருக்கும் பிரண்டன் கிளீசன் என ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். முதல் பாகத்தின் கூட்டணியான எழுத்தாளர்கள் டேவிட் ஸ்டெம், டேவிட் வைய்ஸ் ஆகியோர் திரைக்கதை அமைக்க, இயக்குனர் ராஜ கோஸ்னல்தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.

பொதுவாக அனிமேஷன் படங்களில் நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டங்களில் அதிகமான சாகசக் காட்சிகளும், ஆங்காங்கே சின்னச் சின்ன ட்விஸ்ட்களும் இருக்கும். அதேபோல் காமெடியும் களை கட்டும். தவிர, நாம் நேரில் பார்க்க முடியாத பல பிரமிக்க வைக்கும் கற்பனையான இடங்களும், பொருட்களும் இடம்பெறும். ஆனால், இந்த ‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’வில் இவை எல்லாமே மிஸ்ஸிங். ‘ஸ்மர்ஃப்ஸ்’ கேரக்டர்களின் சேட்டைகளைத் தவிர வேறு எதுவுமே பெரிதாக ஈர்க்கவில்லை.

மொத்தத்தில், குழந்தைகளின் சந்தோஷத்திற்காக இரண்டு மணி நேரங்களைச் செலவழிக்கத் தயாராக இருக்கும் பெற்றோராக நீங்கள் இருந்தால், உடனே கிளம்புங்கள் ‘தி ஸ்மர்ஃப்ஸ் 2’ ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படத்திற்கு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;