சொன்னா புரியாது

 சிவாவின் காமெடியை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்படம்!

விமர்சனம் 26-Jul-2013 10:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘தில்லு முல்லு’ படத்திற்குப் பிறகு சிவா நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘சொன்னா புரியாது’. ஜேம்ஸ்பாண்ட், டைட்டானிக், ஹாரிபாட்டர் படங்களை கலாய்க்கும் வகையில் வெளியான இப்படத்தின் போஸ்டர்களும், சிவாவின் வழக்கமான டைமிங் காமெடிகளோடு வெளிவந்த டீஸர்களும் இப்படத்தை கொஞ்சம் எதிர்பார்க்க வைத்தது என்னவோ உண்மைதான். ஆனால், படம் எப்படி?

ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் ‘வாய்ஸ்’ கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக வேலை செய்யும் சிவாவிற்கு திருமணம் என்றாலே அலர்ஜி. ஆனால், விதி விளையாட வசுந்தராவிற்கும் சிவாவிற்கும் திருமணம் பேசி முடிக்கப்படுகிறது. திருமணம் செய்துவிட்டால், தன் பேச்சுலர் லைஃப் பாதிக்கப்படுமே என பயப்படும் சிவா, கல்யாணத்தை நிறுத்த திட்டம் தீட்டுகிறார்.

ஒரு கட்டத்தில், வசுந்தராவும் அதே எண்ணத்தோடுதான் இருக்கிறார் என சிவாவிற்குத் தெரியவர, இருவரும் சேர்ந்தே தங்களது கல்யாணத்தை நிறுத்துகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை உங்களுக்கு ‘சொன்னா புரியாது’... அதனால் தியேட்டருக்குச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

வழக்கமான சிவா ஸ்டைல் படம்தான் இந்த ‘சொன்னா புரியாது’ படமும். கதை என்று பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம். அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ். அவரின் குரு சி.எஸ்.அமுதனின் ‘தமிழ்ப் படம்’ படத்தின் பாதிப்பு நிறைய இடங்களில் தெரிகிறது.

‘ஹிந்தி நைட்’ பார்ட்டியில் தமிழ்ப்பாட்டுப் பாடி மொக்கை வாங்கும் தன் நண்பன் பிளேடு சங்கருக்காக மைக் பிடித்து ஹிந்திப் பாடல் ஒன்றைப் பாடி காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக சிவா அறிமுகமாகும் காட்சியே செம கலாய். ‘ரோசாப்பூ... சின்ன ரேசாப்பூ’ பாடலை தன் ஸ்டைலில் ஹிந்திப் பாடலாக மாற்றி அவர் பாடும்போது மொத்த தியேட்டரும் சிரிப்பால் குலுங்குகிறது. அதன் பிறகு படம் முழுக்க சிவாவின் ரகளைதான்.

நாயகி வசுந்தரா, பிளேடு சங்கர், சிவாவின் அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், பாட்டி வத்சலா ராஜகோபால், மனோபாலா, கங்கை அமரன் என அவரவர்கள் வாங்கிய சம்பளத்திற்கேற்ப நடித்திருக்கிறார்கள். பவர்ஸ்டாரை வைத்து சில படங்களை பப்ளிசிட்டி பண்ணியதுபோல், இப்படத்தில் சாம் ஆண்டர்சனைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் சமாச்சாரங்களைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. படத்தின் பட்ஜெட் படம் நெடுக எதிரொலித்திருக்கிறது. வசனம் மட்டும் ‘கல கல’ ரகம்!

முழுக்க முழுக்க சிவாவின் டைமிங் காமெடியை மட்டுமே நம்பி இயக்குனர் களமிறங்கியிருப்பது தெரிகிறது. ஆனால், அதற்காக பிட்டு பிட்டாக காமெடிக் காட்சியை ஒட்ட வைத்தது போன்ற திரைக்கதை அமைப்பு சலிப்பைத் தருகிறது. சிவா தொடர்ந்து இதுபோன்ற காமெடி ஸ்டைலையே பண்ணிக்கொண்டிருப்பது ரசிகர்களுக்குப் போரடிக்கலாம். கொஞ்சம் மாத்தலாமே பாஸ்!

மொத்தத்தில் : சிவாவின் காமெடியை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்படம்!

தயாரிப்பு : 360 டிகிரி ஃபிலிம் கார்ப்
வெளியீடு : தேனாண்டாள் ஃபிலிம்ஸ்
இயக்கம் : கிருஷ்ணன் ஜெயராஜ்
இசை : யதீஷ் மகாதேவ்
ஒளிப்பதிவு : சரவணன்
நடிப்பு : சிவா, வசுந்தரா காஷ்யப், பிளேடு சங்கர், மனோபாலா, மீரா கிருஷ்ணன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்


Welcome

Connect with us for the latest news and info on the hot and happenings of Tamil movie industry.

We provide our viewers with the latest news, film reviews, music reviews, actor, actress, movies & events images from the Tamil Cinema Industry - the 'Kollywood'.

Top 10 Cinema
3rd Floor, 13/6, Thanikachalam Road, T.Nagar.
Chennai 600 017. India.
T: +91-87545 66611 / 22
@: info@top10cinema.com

© 2009 - 2017

;