பட்டத்து யானை

ஆக்ஷனும் காமெடியும் இருந்தால் போதும்’’ என நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் ‘பட்டத்துயானை’ உங்களுக்கான படம்தான்

விமர்சனம் 26-Jul-2013 3:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மலைக்கோட்டை’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால் & இயக்குனர் பூபதி பாண்டியன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ‘பட்டத்து யானை’. இருவருமே தங்களுக்கு ஒரு வெற்றி தேவை என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்திருக்கும் இப்படம் அதைப் பூர்த்தி செய்திருக்கிறதா?

காரைக்குடியில் சமையல் வேலை செய்யும் சந்தானத்திடம் வேலைக்கு வந்து சேர்கிறார்கள் விஷால் மற்றும் அவரது நண்பர்கள். சந்தானத்திற்கும் அங்கிருக்கும் ஒரு ரவுடிக்கும் இடையே தகராறு ஏற்பட, ஹோட்டல் வைத்து நடத்தலாம் என சந்தானத்திற்கு ஐடியா கொடுத்து காரைக்குடியிலிருந்து அவரை திருச்சிக்கு அழைத்துக் கொண்டு வருகிறார் விஷால். வந்த இடத்தில் ஐஸ்வர்யாவைப் பார்க்கும் விஷால், காதல் வலையில் சிக்குகிறார்.

இது ஒரு புறமிருக்க, திருச்சியில் இருக்கும் வில்லன் அஜய் கும்பலுக்கும் ஐஸ்வர்யாவின் வீட்டிற்கும் இடையே தகராறு முளைக்கிறது. அதோடு ஐஸ்வர்யாவின் அழகில் மயங்கி வில்லன் அஜய் அவரை மணந்துகொள்ளத் துடிக்க, குறுக்கே நிற்கிறார் விஷால். பிறகு வழக்கமான தமிழ்சினிமாவில் என்ன நடக்குமோ அது அரங்கேறியிருக்கிறது.

முதல் பாதி முழுக்க சந்தானத்தின் காமெடி, இரண்டாவது பாதியில் விஷாலின் ஆக்ஷன் என பங்கு பிரித்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். விஷாலுக்கென்றே எப்போதும் ஒரு பரபர ஃப்ளாஷ்பேக் இருக்க வேண்டுமே! இதிலும் இருக்கிறது. காமெடி + ஆக்ஷன் என்ற கலவையை சரியாகக் கலந்து கொடுத்தால் எப்படியும் ஜெயித்துவிடலாம் என இயக்குனர் எண்ணியதாலோ என்னவோ கதை, திரைக்கதை, லாஜிக் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை.

தன் ஸ்டைலிலிருந்து விலகி ‘சத்யம்’, ‘அவன் இவன்’, ‘வெடி’, ‘சமர்’ என கொஞ்சம் மாற்றி யோசித்து நடித்த படங்கள் எதுவும் சரியாகக் கைகொடுக்காத நிலையில், ‘பட்டத்துயானை’ படம் மூலம் மறுபடியும் தனது பழைய ஃபார்முலாவிற்குத் திரும்பியிருக்கிறார் விஷால். ஏற்கெனவே விஷால் நடித்த ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘மலைக்கோட்டை’ போன்ற படங்களைப் பார்த்தவர்களுக்கு, விஷால் இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு அறிமுகப் படத்தில் நல்ல ‘ஸ்கோப்’ உள்ள கேரக்டர் கிடைக்காதது துரதிஷ்டமே. அதனால், அவரது நடிப்பைப் பற்றி நோ கமெண்ட்ஸ். ஆனால், பார்க்க ரொம்பவும் சோகமாக, மெலிந்த சோனியா அகர்வால் போல் இருக்கிறார். கொஞ்சம் உடம்பில் சதைபோட்டுவிட்டு வந்து, அடுத்த படத்தில் ரசிகர்களை கண்டிப்பாக வசீகரிப்பார் என எதிர்பார்ப்போம்!

முதல் பாதி முழுக்க சந்தானம்தான் ஹீரோ. சமையல்கார ‘கௌரவம்’ கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். சந்தானத்தை அடகு வைத்துவிட்டு விஷாலும் அவரது நண்பர்களும் அடிக்கும் லூட்டி தியேட்டரில் ‘கலகல’ப்பை ஏற்படுத்துகிறது. ‘கடைசி மாவுல சுட்ட குட்டி தோசை மாதிரி இருக்க’, ‘காட்ஸில்லாவை கலர் ஜெராக்ஸ் எடுத்தது மாதிரி யாருடா இவன்’, ‘காடையை வளர்த்து கல்லாவில உட்கார வச்சுருக்கானுங்க’ என தனது வழக்கமான டைமிங் பஞ்ச்களை இப்படத்திலும் ஆங்காங்கே உதிர்த்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். ‘நண்டு’ ஜெகன், ‘வடை போச்சே’ சரித்திரன், ராஜேந்திரன், சிங்கமுத்து என அவரவர் கிடைத்த கேப்பில் காமெடி ‘கிடா’ வெட்டியிருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் வில்லன் குரூப் ஜான் விஜய் மற்றும் அவரது கூட்டாளிகளும் காமெடியன்களாகியிருக்கிறார்கள்.

மெயின் வில்லன்களான அஜய், முரளி ஷர்மா ஆகியோர் தங்களால் முடிந்த அளவு கொலைகள், கற்பழிப்புகளை நிகழ்த்திவிட்டு ஹீரோவிடம் அடிவாங்கும் தமிழ் சினிமா மரபை காப்பாற்றி இருக்கிறார்கள். பட்டிமன்றம் ராஜாவை இப்படி வீணடித்திருக்க வேண்டாம்.

ஆக்ஷன் படத்திற்குத் தேவையான விஷயங்களை மட்டும் சரியாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வைத்தி. ‘என்ன ஒரு... என்ன ஒரு அழகியடா...’ பாடல் மட்டுமே கேட்கும் ரகம். பின்னணி இசை சுமார் ரகம். திரைக்கதை அமைப்பிற்குத் தேவையான வேலைகளைச் செய்திருக்கிறார் எடிட்டர். ‘பஞ்ச்’ வசனங்கள் அதிகம் வைக்காமல், கதைக்குத் தேவையான வசனங்களை மட்டுமே வைத்திருப்பது ஆறுதல்.

‘தங்கள் படத்தில் மக்கள் இதைத்தான் எதிர்பார்த்து வருவார்கள்’ என விஷாலும், பூபதி பாண்டியனும் பேசி வைத்து படமாக்கியிருப்பார்கள் போல. இரண்டரை மணி நேரப் படம் போரடிக்காமல் உட்கார்ந்து பார்க்க முடிந்தாலும், படம் முடிந்து வெளியே வரும்போது, விஷாலின் ஏதோ ஒரு பழைய படத்தைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மட்டும் தவிர்க்க முடியவில்லை

மொத்தத்தில்... ‘‘லாஜிக், கதையெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை, ஆக்ஷனும் காமெடியும் இருந்தால் போதும்’’ என நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் ‘பட்டத்துயானை’ உங்களுக்கான படம்தான்!

தயாரிப்பு : குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்
இயக்குனர் : பூபதி பாண்டியன்
இசை : தமன்.எஸ்.எஸ்
ஒளிப்பதிவு : வைத்தி
நடிகர்கள் : விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம், முரளி ஷர்மா, அஜய், ஜான் விஜய், ‘நண்டு’ ஜெகன், சிங்கமுத்து, ராஜேந்திரன் மற்றும் பலர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;