மரியான்

இந்த ‘மரியானும்’ நம்மை சோதனைக் ‘கடலில்’ மூழ்கடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!

விமர்சனம் 18-Jul-2013 11:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபகாலமாக வெளிவந்த சில கடல்சார்ந்த படங்கள் ரசிகர்களை நிறையவே சோதித்திருக்கும் இந்த நேரத்தில், ‘மரியான்’ படமும் கடல் சம்பந்தப்பட்ட ஒரு கதையோடு வெளிவந்திருக்கிறது. தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் - இயக்குனர் பரத் பாலா என எதிர்பார்ப்புகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத ‘மரியான்’ அந்த ‘நெகடிவ்’ நம்பிக்கை உடைத்திருக்கிறதா?


எத்தகைய பிரச்சனைகள் சூழ்ந்திருந்தாலும், உண்மையான காதல் நெஞ்சில் இருந்தால் அதிலிருந்து மீண்டு வெளிவரலாம் என்கிறது ‘மரியான்’ படம்.


நீரோடி கிராமத்தில் கடல் ராசாவாக சுற்றிக் கொண்டிருக்கும் மரியானை சின்ன வயதிலிருந்தே விழுந்து விழுந்து காதலிக்கிறாள் பனிமலர். ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டும் காணாமல் சுற்றும் மரியான், ஒரு கட்டத்தில் பனிமலரின் காதலில் உருகி அவனும் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால் பனிமலரின்  வளர்ப்புத் தந்தையான ‘தொம்மை’ வாங்கிய கடனை அடைக்க வேண்டிய கடமை மரியானுக்கு வர, அதனால் பணத்திற்காக ஆப்பிரிக்க எண்ணெய் கிணற்றில் வேலை செய்ய 2 வருட அக்ரிமென்டில் கையெழுத்திட்டு, சூடான் பயணிக்கிறான். எல்லாம் நல்லபடியாக முடிந்து, நாடு திரும்பும் நேரத்தில் ஆப்பிரிக்க தீவிரவாதிகள் சிலர் மரியானையும் அவனது நண்பர்களையும் கடத்துகிறார்கள். தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் ‘மரியான்’ தப்பித்தானா? மரியான் - பனிமலர் காதல் என்னவாகிறது என்பதே படத்தின் இரண்டாம் பாதி.


இன்னும் எத்தனை காலத்திற்குதான் தமிழ் சினிமா ஹீரோயின்கள் அனைவரும் தனுஷ் மீது இப்படி பாய்ந்து பிராண்டி காதலிப்பார்கள் என்பது தெரியவில்லை. போரடிக்குது டைரக்டர்ஸ்... ப்ளீஸ் கொஞ்சம் கவனிங்க! ஆனால் தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மேலும் மேலும் மெருகேற்றி வருகிறார் என்பதை இப்படத்திலும் பிரமாதமாக பிரதிபலித்திருக்கிறார். அதிலும் நண்பன் செத்ததை நினைத்து தனுஷ் புலம்பும்போதும், பார்வதியை அறையும் அந்தக் காட்சியிலும் ‘அடா.. அடா..’ என்னவொரு பாடி லாங்குவேஜ். சூப்பர் தனுஷ்!


காத்திருந்து ‘மரியான்’ படம் கிடைத்ததில் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு நல்ல ஸ்கோப்புள்ள கேரக்டர்தான் கிடைத்திருக்கிறது பார்வதிக்கு. ‘மாரி’யாக பூ வாசம் வீசியவர், இப்படத்தில் பனிமலராக படம் முழுவதும் மீன் வாசத்தோடு வலம் வந்திருக்கிறார். மலையாள நடிகர் சலீம் குமார், உமா ரியாஸ்கான், அப்புக்குட்டி இவர்களுக்கெல்லாம் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படத்தில் எந்த வேலையும் இல்லை. நீண்டநாள் கழித்து ‘நண்டு’ ஜெகன் இப்படத்தில் கொஞ்சம் கவனம் ஈர்த்திருக்கிறார்.


அழகான கடல் கிராமம், அலப்பறையான தனுஷ், உருக உருகக் காதலிக்கும் பார்வதி, ஏ.ஆர்.ரஹ்மானின் ‘நச்’சென்ற இரண்டு பாடல்கள் என சுவாரஸ்யமாக ஆரம்பித்து, இன்டர்வெலில் தீவிரவாதிகளின் கையில் தனுஷ் சிக்கி படாதபாடு படுவதோடு முதல்பாதி, பெரிய எதிர்பார்ப்புடன் முடிவடைகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் தீவிரவாதிகளிடமிருந்து தப்பிச்செல்லும் தனுஷைப் போலவே படத்தின் திரைக்கதையும் திக்கித் திணறி பயணிக்கிறது. 


எதற்காக தனுஷை உருகி உருகி பார்வதி காதலிக்கிறார்? முதலில் வேண்டாம் என வெறுக்கும் தனுஷ் திடீரென காதலில் விழுவது ஏன்? இந்தப் படத்தின் கதைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத அந்த கடலுக்கடியில் தனுஷ் பயணிக்கும் காட்சி, அப்புக்குட்டி இலங்கை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற காட்சி, சிறுத்தையிடம் சிக்கிக்கொள்வதுபோல் தனுஷ் நினைக்கும் காட்சி என படம் நெடுக பல  காட்சிகளை இப்படி வலிய திணித்திருக்கிறார்கள்.


ஆப்பிரிக்க தீவிரவாதியாகவே இருந்தாலும், அவனும் ஹீரோ கையால் அடிபட்டுச் சாக வேண்டும் என்பதுதான் தமிழ் சினிமாவின் நியதி என நினைத்திருப்பார் போல இயக்குனர் பரத் பாலா! அதுவும் நம்மூர் வில்லன்களைப் போல தனக்கு அறிவுரை சொல்லும் தன் அடியாளையே அந்த ஆப்பிரிக்காரன் போட்டுத்தள்ளும்போது,,, ‘அடப் பாவி... நீயுமாடா இப்படி?’ என கேட்கத் தோன்றுகிறது.


சரி இதுவாவது போகட்டும்... தீவிரவாதிகளிடம் சிக்கியிருக்கும் தனுஷின் தலைமுடி அடுத்தடுத்த காட்சிகளில் நிறையவும், குறைவாகவும் தெரிகிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா உதவி இயக்குனர்ஸ்! பரபரப்பாக செல்லும் திரைக்கதையில் ‘கடல் ராசா..’, ‘நெஞ்சே எழு...’ பாடல்கள் வேறு பிரேக் அடிக்கின்றன. போதாதற்கு, ரெண்டு வருடமாக தனுஷ் ஊரில் இல்லாதபோதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் பார்வதியை கற்பழிக்க முயற்சிக்கும் அந்த ‘லோக்கல்’ வில்லனை நினைத்தால் ‘சிரிப்பு சிரிப்பா’க வருகிறது.


மொத்தத்தில், இந்த ‘மரியானும்’ நம்மை சோதனைக் ‘கடலில்’ மூழ்கடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;