ரெட் 2 (Red 2)

லாஜிக் பார்க்காமல் சென்றால், துப்பாக்கி வெடிச் சத்தங்களையும், சின்ன சின்ன காமெடிகளையும் ‘ரெட் 2’வில் ரசித்துவிட்டு வரலாம்.

விமர்சனம் 18-Jul-2013 4:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த வருடத்தில் இது மூன்றாவது படம். மூன்றுமே ஆக்ஷன் படங்கள் வேறு. புரூஸ் வில்லிஸுக்கு வயது 58 ஆகிறது என்பதை, நாம் நம்பினாலும், மனிதருக்கு அதில் நம்பிக்கையில்லை போலும். ‘ஜி.ஐ.ஜோ 2’, ‘டை ஹார்டு 5’ ஆகிய படங்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், நாளை வெளியாகவிருக்கும் ‘ரெட் 2’ படம் மூலம் 2013ல் தனது மூன்றாவது கணக்கையும் துவங்கவிருக்கிறார் புரூஸ் வில்லிஸ். ஹாலிவுட்டில் ஒரே வருடத்தில் அதிக படங்கள் நடிக்கும் ஹீரோ நிச்சயம் இவராகத்தான் இருப்பார். ஓ.கே.... ‘ரெட் 2’வில் என்ன செய்திருக்கிறார் நம் ஹீரோ எனப் பார்க்கலாம்...

2010ல் வெளிவந்து வெற்றிபெற்ற ‘ரெட்’ படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த ‘ரெட் 2’. இப்படத்தின் பிரதான ஹீரோ ரிட்டையர்டு சி.ஐ.ஏ. ஏஜென்ட்டான ஃபிராங்க் தனது கூட்டாளிகளான மார்வின், சாரா ஆகியோருடன் காணாமல் போன நியூக்ளியர் பாம் ஒன்றை கண்டுபிடிப்பதற்காகப் புறப்படுகிறார். அவர்கள் புறப்படும் அதேவேளையில், ஃபிராங்க்கை கொன்றுவிட்டு, அந்த நியூக்ளியர் பாமைக் கைப்பற்ற இன்னொரு படையும் கிளம்புகிறது.

நியூக்ளியர் பாமைத் தேடி பாரிஸ், லண்டன், மாஸ்கோ என பயணிக்கும் ஃபிராங்க் அன் கோவினருக்கு போகப் போகத்தான் எதிரிகளின் பலம் தெரிய வருகிறது. அதோடு, தன்னைக் கொல்வதற்காக ஏவப்பட்டிருக்கும் உலகின் பயங்கரமான கான்ட்ராக்ட் கில்லர்களான விக்டோரியா, ஹன் சோ பாய், கட்ஜா ஆகியோரையும் வீழ்த்திவிட்டு, அவர்களையும் தன்னுடன் சேர்ந்துக் கொண்டு தனது திட்டங்களை நிறைவேற்றப் புறப்படுகிறார் ஃபிராங்க்.

நியூக்ளியர் பாமைக் கண்டுபிடித்து அதைக் கைப்பற்றப்போகும் கடைசி நேரத்தில், தாங்கள் அப்பாவி என நினைத்துக்கொண்டிருந்த ஒருவன் ‘அடப்பாவி’ வில்லனாக மாறி, 1 மணி நேரத்தில் வெடிப்பதுபோல் நியூக்ளியர் பாமையும் இயக்கிவிட்டு, ஃபிராங்கின் காதலி சாராவையும் கடத்திச் செல்கிறான். அதன்பிறகு துப்பாக்கிச் சத்தங்கள் முழங்க க்ளைமேக்ஸில் என்ன நடந்திருக்கும் என்பது உங்கள் யூகத்திற்கு!

ஃபிராங்கிளினாக புரூஸ் வில்லிஸ், அவரது நண்பன் மார்வினாக ஜான் மால்கோவிச், காதலி சாராவாக மேரி லூயிஸ் பார்க்கர், கான்ட்ராக்ட் கில்லர் விக்டோரியாவாக ஹெலன் மிர்ரன், ஹன் சோ பாயாக யுங் ஹுன் லீ, கட்ஜாவாக காத்தரீன் ஸுட்டா ஜோன்ஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களோடு வித்தியாசமான வில்லன் வேடத்தில் அந்தோனி ஹோப்கின்ஸும் கலக்கியிருக்கிறார்.

புரூஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்தமாதிரி கேரக்டர்களை அவர் ஏற்கெனவே ‘டை ஹார்டு’ உள்ளிட்ட பல படங்களில் பண்ணி அசத்தியிருக்கிறார். இதிலும் அதே ‘மொட்டத்தலை’யோடு துப்பாக்கி சகிதம் விளையாடியிருக்கிறார். மேரி லூயிஸ், ஹெலன் மிர்ரன் ஆகியோர் தங்களின் சிறப்பான பங்கை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் வில்லனின் ஆள் ஒருவனை துன்புறுத்தி அவனிடமிருந்து புரூஸ் விஷயத்தைக் கறக்க முயல, அவன்மேல் பரிதாபப்பட்டு அவனை கட்டியணைத்து முத்தம் கொடுத்தே அவனிடம் விஷங்களை கறக்கும் இடத்தில் ‘க்ளாப்ஸை’ அள்ளுகிறார் மேரி லூயிஸ். படம் நெடுக அவரின் அப்பாவி நடிப்பு நம்மை வெகுவாகக் கவர்கிறது. சீன நடிகர் யுங் ஹுன் லீ சண்டைக்காட்சிகளில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.

வெறும் ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல் ஆங்காங்கே ஒன்&லைனர் காமெடிகளிலும் கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் டீன் பரிசோட். மெதுவாகச் செல்லும் திரைக்கதையில் ஆங்காங்கே ஆக்ஷன் காட்சிகளையும், சில இடங்களில் ட்விஸ்ட்களையும் வைத்திருப்பது படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது.

பல நாடுகளுக்குப் பறந்து பறந்து சென்று யார் யார் கூடவே பேசுகிறார்கள், என்னென்னவோ செய்கிறார்கள். ஆனால், எந்ததெந்த நாடுகளுக்கு எதற்காகப் போகிறார்கள் என்பதுதான் கடைசி வரை நமக்கு ஒன்றும் புரியவில்லை. அதோபோல் க்ளைமேக்ஸையும் கொஞ்சம் வித்தியாசமாக எடுத்திருக்கலாம். ஏற்கெனவே பல படங்களில் பார்த்துப் பழகிய காட்சிதான் என்பதால், பெரிதாகக் கவரவில்லை. அனேகமாக ‘ரெட் 3’யும் எடுப்பார்கள் போல. அதற்கான சாத்தியக்கூறுகள் க்ளைமேக்ஸில் தெரிகிறது.

லாஜிக் பார்க்காமல் சென்றால், துப்பாக்கி வெடிச் சத்தங்களையும், சின்ன சின்ன காமெடிகளையும் ‘ரெட் 2’வில் ரசித்துவிட்டு வரலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;