டர்போ - அனிமேஷன் 3டி பட விமர்சனம்

நத்தையின் விஷுவல் வித்தை!

விமர்சனம் 17-Jul-2013 4:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அனிமேஷன் படங்கள் எப்போதும் குழந்தைகளின் தனிப்பட்ட உலகம். அங்கே லாஜிக்குக்கெல்லாம் வேலையே கிடையாது. எல்லாமே மேஜிக்தான். பார்க்கும் எந்தப் பொருளுக்கும் அங்கே உயிர் இருக்கும். தகர டப்பாகூட பேசும், பாடும் ஏன் டான்ஸும் ஆடும். அதனாலேயே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன அனிமேஷன் படங்கள்.

அந்த வரிசையில், இந்த ‘டர்போ’வும் குழந்தைகளை ரசிக்க வைக்கவும், பெரியவர்களை குழந்தைகளாக மாற்றி குதூகலிக்கச் செய்யவும் வரவிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை நத்தைகள் இஞ்ச்... இஞ்ச்சாக நகரக்கூடியவை. ஆனால், ‘டர்போ’ நத்தையின் வேகம் எவ்வளவு தெரியுமா? மணிக்கு 230 மைல்கள்! ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள்... ‘டர்போ’ ரேஸில் பயணிக்கலாம்!

மற்ற நத்தைகளைப்போலவே நமது ஹீரோ ‘டிட்டோ’வும் ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்தாலும், அதற்கு ‘ஜெட்’ வேகத்தில் போகவேண்டும் என்பது கனவு. டிவியில் ஒளிரப்பாகும் ‘இன்டியானாபோலிஸ் 500’ ரேஸைப் பார்த்து பார்த்து, அந்த ரேஸில் காருக்கு இணையாக தானும் போட்டியிட வேண்டும் என மனதிற்குள் ஆசை வளர்த்து வருகிறது. தன் உடம்பில் ‘5’ என்ற நம்பரையும், தன் ஓட்டில் ‘ரேஸ்’ சிம்பளையும் வரைந்து வைத்துக் கொண்டே சுற்றித் திரியும் அளவிற்கு ‘டிட்டோ’வுக்கு ரேஸ் பைத்தியம்!

ஒரு நாள் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது ஏற்படும் ஒரு சின்ன விபத்தால், ரேஸ் கார் ஒன்றின் இஞ்சினுக்குள் புகுந்து வெளியே தூக்கி வீசப்படுகிறது டிட்டோ. அதன்பின்பு அதன் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, ஒரு டர்போ என்ஜின் பொருத்தப்பட்ட ரேஸ் கார் போல் மாறும் ‘டிட்டோ’, ‘டர்போ’வாக பெயர் மாறி பண்ணும் அட்டகாசங்களே இப்படத்தின் ‘கலகல’ திரைக்கதை! அப்பப்பா... எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் அனிமேஷன் பட இயக்குனர்கள். நத்தைகளுக்கும் ஓர் உலகம் உண்டு என இப்படி கற்பனை செய்து பார்த்த இயக்குனர் டேவிட் சோரென் நிச்சயம் ‘குழந்தை மனசு’க்காரராகத்தான் இருக்க வேண்டும். நத்தைகள் கூட்டத்தின் வாழ்க்கையை நத்தையாக மாறி ஊர்ந்தததுபோல்... ஸாரி உணர்ந்ததுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஒரு நத்தை ரேஸ் வீரனாக மாறத் துடிக்கும் உணர்வுகளை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு அடி நீளத்தை ‘17’ நிமிடத்தில் கடந்துவிட்டு சந்தோஷக் கூச்சலிடுவதாகட்டும், ‘டர்போ’ சக்தி வந்தவுடன் டிட்டோவின் கண்கள் இரண்டும் ஹெட்லைட்டாகவும், அதன் கூடு எஞ்சின்போலும் ஆகும் இடங்களாகட்டும், நத்தைகளுக்குள்ளே நடக்கும் ரேஸாகட்டும், இப்படி ஒவ்வொரு காட்சிகளிலும் நத்தைகளை வைத்து மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார்கள் இப்படத்தின் அனிமேஷன் கிரியேட்டர்கள்.

அதிலும், தன் கனவு நாயகனுடன் ரேஸில் மோதும் அந்த க்ளைமேக்ஸ் காட்சிகள் கிராபிக்ஸின் உச்சம் என்று சொல்லலாம். 250 மைல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் கார்களுக்கிடையே ‘டர்போ’ நத்தை புகுந்து புகுந்து செல்லும் பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பரபர ரேஸில், கார் ஒன்று ஆக்ஸிடென்டாக, அதிலிருந்து பறந்து வரும் கார் சக்கரம் ஒன்றின் ‘ரிம்’களுக்கிடையே புகுந்து ‘டர்போ’ வெளிவரும்போது ஒருமுறை நமக்கே உயிர் வெளியே வந்துபோகிறது. கடைசியில் ‘டர்போ’ ஜெயிக்கும் அந்த முடிவுக்காட்சியில், நம்மையும் அறியாமல் எழுந்து நின்று ‘டர்போ... டர்போ’ என கத்தத் தோன்றுகிறது.

காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனிமேஷனில் ஒரு ‘கமர்ஷியல்’ படம் இந்த ‘டர்போ’. மொத்தத்தில் நத்தையின் விஷுவல் வித்தை என்று சொல்லலாம் இப்படத்தை!

சமீபத்திய பிரம்மாண்ட ஹாலிவுட் ரிலீஸ்களான ‘வேர்ல்டு வார் இஸட்’, ‘பசிபிக் ரிம்’, ‘தி லோன் ரேஞ்சர்’ போன்ற படங்களை, அவற்றோடு வெளிவந்த ‘மான்ஸ்டெர்ஸ் யுனிவர்சிட்டி’, ‘டெஸ்பிக்கபிள் மீ 2’ போன்ற அனிமேஷன் படங்கள் வசூலில் பின்னுக்குத் தள்ளின. இந்த ‘டர்போ’வுடன் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரும் ஹாலிவுட் படங்களுக்கும் நிச்சயம் பெரிய சவால் காத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;