ருத்ர நகரம் ( Pacific Rim)

நல்ல 3டி தரம் உள்ள தியேட்டருக்குச் சென்றால் மட்டுமே திருப்தியாக கண்டுகளிக்க முடியும் இந்த ‘ருத்ர நகர’த்தை!

விமர்சனம் 16-Jul-2013 1:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பூமியிலுள்ள மனிதர்களைத் தாக்கிவிட்டு, அங்கே தங்களுடைய இனத்தை குடியமர்த்த ‘ஏலியன்கள்’ எடுக்கும் முயற்சியே ‘பசிஃபிக் ரிம்’ படத்தின் கதை. தமிழில் ‘ருத்ர நகரம்’.

வழக்கமாக ஏலியன்கள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து மனிதர்களிடம் பேரம் பேசும். இதில் அப்படியெல்லாம் இல்லாமல், பசிபிக் கடல் வழியே ‘கைஜு’ எனப்படும் பிரம்மாண்டமான மிருகங்களை அனுப்பி மனிதர்களைக் கொல்வதற்குத் திட்டம் போடுகின்றன. ஆரம்பத்தில் இந்த கைஜுவின் பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்து மலைக்கும் ராணுவம், அதன் பின்னர் அவற்றுடன் போராடுவதற்கென்றே ‘ஏகர்’ எனப்படும் பிரம்மாண்டமான இயந்திர மனிதர்களை உருவாக்குகிறார்கள்.

திறமை வாய்ந்த இரண்டு பைலட்டுகளைக் கொண்டுதான் இந்த ஏகரை இயக்க முடியும். இப்படி உருவாக்கப்பட்ட ஏகருக்கும் கைஜுவுக்கும் இடையே போராட்டங்கள் தொடர்ந்தனவே தவிர, அவற்றை முற்றிலும் அழிக்க முடியாமல் திணறுகிறார்கள். ஒரு கட்டத்தில், ஏகரால் கைஜுவை சமாளிக்க முடியாத அளவுக்கு அதன் சக்திகள் அதிகரித்துக் கொண்டே செல்ல, ‘ஏகர்’ மிஷனை கைவிட்டுவிட்டு மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பிக்கிறது இராணுவம்.

ஆனால், ஏகரால் மட்டுமே கைஜுக்களை அழிக்க முடியும் என நம்பும் ‘ஏகர்’ படையின் தலைவர், இராணுவத்திற்குத் தெரியாமல் தனியாக கைஜுக்களை அழிக்கக் கிளம்புகிறார். அதன்பின்னர், கைஜுக்கள் கடல் வழியே பூமிக்கு வரும் பாதையைக் கண்டுபிடிக்கிறார்கள் ஏகர் படையினர். கடலின் அடி ஆழத்திலிருந்து அவை வரும் பாதையை அழித்துவிட்டால், இந்த பேராபத்திலிருந்து நிரந்தரமாக விடுபடலாம் என்று நினைக்கும் அவர்கள் அதற்கான போராட்டத்தில் குதிக்கிறார்கள். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே பிரம்மாண்டமான க்ளைமேக்ஸ்.

30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவரும், ‘ஹெல்பாய்’, ‘ஹல்க்’ உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவருமான கில்லர்மோ டெல் டோரோ தான் இந்த ‘பசிஃபிக் ரிம்’ படத்தையும் இயக்கியிருக்கிறார். ‘ரியல் ஸ்டீல்’ படத்தின் இயந்திர மனிதனையும், ‘காட்ஸில்லா’வையும் கலக்கியடித்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

முழுக்க முழுக்க டெக்னாலஜியை நம்பி இயக்குனர் களம் இறங்கியிருக்கிறார் என்பது படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்க்கும்போது நன்றாகவே தெரிகிறது. ஆனால், அதற்காக திரைக்கதையிலும், லாஜிக் விஷயங்களிலும் பெரிதாக அக்கறை காட்டாமல் இருந்திருப்பது படத்தின் பெரிய மைனஸ்.

என்னதான் விஷுவலாக அவர்கள் நம்மை ஏமாற்ற முயன்றாலும், படம் பார்க்கும்போது பல கேள்விகள் நம் மண்டையைக் குடைவதைத் தவிர்க்க முடியவில்லை. கைஜு, ஏகர் மோதும் காட்சிகளை உண்மையிலேயே அதிசயிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்கள். 3டியில் பார்க்கும்போது, கைஜு நம்மையும் தாக்கிவிடுமே என்ற பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

1000 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் இந்த பிரம்மாண்டப் படத்தின் ஒளிப்பதிவை கில்லர்மோ நவாரோ கவனிக்க, இசையமைத்திருக்கிறார் ரேமின் டிஜாவதி. சார்லி ஹன்னா, இட்ரிஸ் எல்பா, சார்லிடே, ரிங்கோ கிருச்சி ஆகியோர் நடித்திருக்கும் ‘பசிஃபிக் ரிம்’ படத்தை தமிழில் ‘ருத்ர நகரம்’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ்.

மொத்தத்தில், நல்ல 3டி தரம் உள்ள தியேட்டருக்குச் சென்றால் மட்டுமே திருப்தியாக கண்டுகளிக்க முடியும் இந்த ‘ருத்ர நகர’த்தை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;