‘’என் தம்பி சிவகார்த்திகேயன்!’’ - தனுஷ் பெருமிதம்

 ‘’என் தம்பி சிவகார்த்திகேயன்!’’  - தனுஷ் பெருமிதம்

செய்திகள் 15-Jul-2013 1:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் பி.மதன் தயாரிக்கும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அறிமுக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், திவ்யா நடிக்கும் இப்படத்தின் இசை பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல் சிடியை தனுஷ் வெளியிட, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.

விழாவில் தயாரிப்பாளர் பி.மதன் அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது தனுஷை, ‘’ஹிந்தி நடிகர் தனுஷ் அவர்களே’’ என்று வரவேற்றார். தொடர்ந்து பேசியவர்களும் தனுஷை, கவிஞர் என்றும் பாடகர் என்றும் புகழ்ந்தனர். அதற்கு பதிலளித்து பேசிய தனுஷ்,

"என்னை பற்றி பேசும்போது பாடகர், பாடலாசிரியர், ஹிந்தி நடிகர் என்று சொல்கின்றனர். ஆனால் நான் தமிழ் நடிகன்’’ என்று, தான் பேசிகிட்டிருந்த இடத்தை விட்டு, சற்று தள்ளி வந்து , தான் கட்டிய வேட்டியை பார்வையாளர்கள் பார்க்கும்படி செய்துவிட்டு ‘’அதுவும் வேஷ்டி கட்டிய தமிழ் நடிகன்’’ என்று கூறியதோடு, ‘’ஹிந்தின்றது உடம்பு மாதிரி, தமிழ்ன்றது மூச்சு மாதிரி, .மூச்சு இல்லைன்னா உடம்பு நாறிடும்’’ என்றார்.

தொடர்ந்து பேசியவர், ‘’நான் ஹிந்தி சினிமாக்கு போனவுடனே தமிழ் சினிமாவில் என்னோட இடத்துக்கு வர்றதா சொன்னார் சிவகார்த்திகேயன். இந்த இடத்துக்கு வர நான் எவ்ளோ கஷ்டபட்டேன், நொந்தேன் தெரியுமா? அந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்’’ என்று சிரித்து கொண்டே.... சிவகார்த்திகேயனை பார்த்து, ‘’இன்னும் 10 வருஷம், அதுக்கு அப்புறம் அந்த இடத்தை எடுத்துக்கோ. சிவகார்த்திகேயன் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே அவரோட திறமையை தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் பார்த்து ரசித்திருக்கேன். நல்ல டைமிங் உள்ள நடிகர். அவரை '3' படத்துல நடிக்க வச்சோம். அதுலதான் தெரிஞ்சது.

இவர் கேரக்டருக்கான நடிகர் இல்லே, ஹீரோவுக்கான எல்லா தகுதிகளும் பொருந்திய நடிகர் என்பது! அதனால தான் ‘எதிர்நீச்சல்’ படத்துல ஹீரோ ஆக்கினோம். இப்ப எனக்கு மேடையில கிடைக்கிற கைத்தட்டலைவிட அவருக்கு அதிகம் கைத்தட்டல் கிடைக்கும் நாள் சீக்கிரமே வரும். சிவா என்னை ‘நண்பனுக்கும் மெலே’ என்று சொன்னார். ஆனா அவர் எனக்கு தம்பி.

எப்படி பேசறேன்னு தெரியலை. என்னவோ பேசணும்னு தோணுது..பேசினேன். அவர் இன்னும் பெரிய நிலைக்கு வருவார்’’ என்றார் தனுஷ். இதை கேட்டுக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன், தன்னை மீறி வந்த ஆனந்த கண்ணீரை கட்டுப்படுத்தினார்.

விழா ஏற்பாட்டினை இணை தயாரிப்பாளர்கள் ஜேம்ஸ், மற்றும் ராஜா, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் குழுவினர் செய்திருந்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - அழகழகாக பாடல் வீடியோ


;