‘விஸ்வரூபம் 2’ எப்படி இருக்கும்?

‘விஸ்வரூபம் 2’ எப்படி இருக்கும்?

செய்திகள் 8-Jul-2013 10:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விஸ்வரூபம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடித்து வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் எதிர்பார்ப்பு வானளாவ உயர்ந்து நிற்கிறது. தவிர, சமீபத்தில் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் எப்போது வெளிவரும் என கமல் ரசிகர்களின் ஏக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தற்போதைய நிலை என்ன?

‘விஸ்வரூபம்’ படம் கதை எழுதும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததால், முதல் பாகத்தில் நீக்கப்பட்ட காட்சிகளோடு புதிதாக பல காட்சிகளையும் சேர்த்து தயாராகி வருகிறது இந்த இரண்டாம் பாகம். தற்போது, படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டதாம்.

இப்படத்தின் பிரதான வில்லனான ராகுல் போஸ், படப்பிடிப்பிற்காக தற்போது சென்னைக்கு வந்துள்ளார். ஏற்கெனவே, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது சென்னையின் ரகசிய இடமொன்றில் ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம். இதன்பிறகு, க்ளைமேக்ஸிற்காக டெல்லிக்குச் செல்ல இருக்கிறார்கள்.

இந்த இரண்டாம் பாகம், ‘விஸ்வரூபம்’ படத்தின் முந்தைய காலகட்டமும் (பிரீக்குவல்), பிந்தைய காலகட்டமும் (சீக்குவல்) சேர்ந்த ஒரு படமாக இருக்குமாம். முதல் பாகத்தில் ‘ஆரோ 3டி சவுண்ட் சிஸ்ட’த்தை தமிழ்சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த உலகநாயகன், இப்படத்தில் மேலும் பல டெக்னாலஜி புதுமைகளைக் கையாண்டு வருகிறாராம். முதல் பாகத்தில் ஆக்ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். ஆனால், இந்த ‘விஸ்வரூபம் 2’வில் ரொமான்டிக் மற்றும் எமோஷனல் காட்சிகள் அதிகம் இருக்குமாம் (அப்படினா, கமலின் ஸ்பெஷாலிட்டி முத்தங்கள் நிச்சயம் இருக்கும்).

அதேபோல், ‘விஸ்வரூபம்’ படத்தின்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு சமாதானம் செய்யும் வகையில், இப்படத்தில் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கான காட்சிகள் நிறைய இருக்கிறதாம். முதல் பாகத்தைப்போல் நீளமான படமாக இல்லாமல், இரண்டுமணி நேரங்களுக்கும் குறைவாகவே இருக்குமாம் இந்த ‘விஸ்வரூபம் 2’. முதல் பாகத்தின் நடனக்காட்சி தேசியவிருது பெற்றதால், இப்படத்தின் நடனத்திற்கும் நிறைய மெனக்கெட்டுள்ளார்களாம்.

முதல் பாகத்திற்கு இசை ஷங்கர்-இஷான்-லாய். இப்படத்திற்கு இசை ‘வாகை சூட வா’ புகழ் ஜிப்ரான். முதல்பாகத்தின் முக்கியப் பாத்திரங்களோடு, சில புதிய கேரக்டர்களும் இப்படத்தில் வருவார்களாம். அவர்களைப்பற்றிய தகவல்களை இதுவரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

பிரச்சனைகள் எதுவும் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை ஒருமுறை சென்சாரிடம் போட்டுக் காண்பிக்கும் திட்டமும் இருக்கிறதாம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்தால், ‘விஸ்வரூபம் 2’ உலகநாயகன் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;