‘சிங்கம் 2’ விமர்சனம்

இந்த வருடத்தின் ‘சூப்பர்ஹிட்’ படவரிசையில் ‘சிங்கம் 2’விற்கு நிச்சயம் இடமுண்டு.

விமர்சனம் 5-Jul-2013 3:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழின் முதல் ‘சீக்குவல்’ (தொடர்ச்சி) படம் என்று தாராளமாகச் சொல்லும் அளவுக்கு ‘சிங்கம்’ முதல் பாகத்தின் அதே கூட்டணியுடன், வெளிவந்திருக்கிறது ‘சிங்கம் 2’. முதல் பாகத்தின் அசுர வெற்றியை தக்க வைத்துள்ளதா சூர்யா + ஹரி டீம்?

முதல் பாகத்தின் ‘க்ளிப்’பிங்கோடு ஆரம்பிக்கிறது படம். ‘சிங்கம்’ க்ளைமேக்ஸில் ரகசியமாக தூத்துக்குடியை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்கும் சூர்யா, இப்படத்தின் முதல் காட்சியிலேயே அஞ்சலியுடன் ஆடிக்கொண்டே கடத்தல் கும்பல் ஒன்றை வேவு பார்க்கிறார். ஹன்சிகா படிக்கும் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கும் ‘மிஷனி’ல் இறங்குகிறார் துரைசிங்கம் (சூர்யா).

லோக்கல் ரவடி சகாயம் (ராஜேந்திரன்), அவனுடைய முதலாளி பாய் (முகேஷ் ரிஷி), அவனுக்கும் மேலே தங்கராஜ் (ரகுமான்) என கூட்டணி அமைத்து போதைப் பொருட்கள் கடத்துவதை ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கிறார் துரைசிங்கம். மொத்த நெட்வொர்க்குக்கும் பின்னணியில் இன்டர்நேஷனல் கடத்தல்காரனான டேனி (டேனி சபானி) இருப்பது தெரியவந்ததும் கழட்டி வைத்த காக்கிச் சட்டையை மீண்டும் அணிந்து கொண்டு வேட்டைக்குக் கிளம்புகிறார். அதன்பிறகு ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து வேட்டையின் முடிவை துரைசிங்கம் எப்படி எழுதுகிறார் என்பதே ‘சிங்கம் 2’வின் அதிரடி ஆக்ஷன் முடிவு.

‘சிங்கம்’ படத்தின் முக்கிய கேரக்டர்கள் அனைத்தையும் அட்சரசுத்தமாக அப்படியே பயன்படுத்தி, இப்படம் அதன் தொடர்ச்சி என்பதை ஆணித்தரமாக ரசிகர்களின் மனதில் பதிய வைத்ததற்காக ‘ஸ்பெஷல் பொக்கே’ கொடுக்கலாம் இயக்குனர் ஹரிக்கு. முதல் பாகத்தின் முக்கிய கேரக்டர்கள், இந்த இரண்டாம் பாகத்தின் சில புதிய கேரக்டர்கள் என ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தை, எந்தவிதத்தில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என யோசித்து அற்புதமாக திரைக்கதை அமைத்திருப்பதில் தெரிகிறது ஹரியின் இன்டலிஜென்ஸ்.

அதேபோல், மூன்று வருடங்களுக்கு முன் ‘சிங்கம்’ படத்தில் எப்படி இருந்தாரோ அதே தோற்றத்தில் அதைவிட பலமடங்கு வெறியோடு இப்படத்தில் விளையாண்டிருக்கிறார் ‘துரைசிங்கமாக’ கர்ஜித்திருக்கும் சூர்யா. அவருடைய நடை, உடை, பாவனை என அத்தனையிலும் சூர்யாவை மறக்கடித்துவிட்டு ‘துரைசிங்க’த்தை வாழ வைத்திருக்கிறார். டிரைலரில் பார்த்தபோது, கொஞ்சம் ஓவராகத் தெரிந்த சூர்யாவின் ‘பஞ்ச்’ வசனங்களை படத்தின் காட்சிகளோடு சேர்த்துப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் உணர்ச்சிவசப்படும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பு. மொத்தத்தில் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார்.

‘காவ்யா’வாக அனுஷ்கா இரண்டு பாடல்களுக்கு வந்து அழகாக ஆடிவிட்டுப் போகிறார். ‘சத்யா’வாக ஹன்சிகா ‘ஹாயாக’ ஆங்காங்கே வருகிறார் (இருந்தாலும், அவரை சாகடித்து ஹன்சிகாவின் ரசிகர்களை இப்படி நோகடிக்க வேண்டுமா ஹரி சார்?). வில்லன்கள் ராஜேந்திரன், முகேஷ் ரிஷி, ரகுமான் அவரவர் வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள். மெயின் வில்லன் டேனி சபானியின் ஓபனிங் பலமாக இருந்தாலும், ஃபினிஷிங் சரியில்லை.

ஏட்டு எரிமலையின் (விவேக்) ஆட்டங்களைக் குறைத்து, ட்ரண்டுக்குத் தகுந்தபடி சூசையின் (சந்தானம்) அடாவடிகளைக் அரகேற்றி படம் நெடுக ‘கலகலப்பு’க்கு தீனி போட்டிருக்கிறார்கள். அதிலும் அனுஷ்காவைப் பார்த்ததும் ‘காதல் வந்தாலே...’ என அனுஷ்காவுடன் சந்தானம் டூயட் பாடுவதுபோல் நினைப்பது, ‘கஜினி’யின் அசின் - வடிவேல் காம்பினேஷன் ரிட்டர்ன்ஸ். தியேட்டரில் சிரிப்பலை அடங்க வெகுநேரம் பிடிக்கிறது. ‘பஜ்ஜி சீவுறீங்களா?’, ‘கப்பல் தரைதட்டியிருச்சு...’ என தன் டபுள்மீனிங் வசனங்களையும் வழக்கம்போல் ஆங்காங்கே அள்ளித் தெளிக்க மறக்கவில்லை சந்தானம்.

ஜெட் வேக ஸ்கிரீன் ப்ளேவிற்கு ஈடுகொடுத்து கேமராவுடன் ஓடியிருக்கிறார் ப்ரியன். அதேபோல் எடிட்டர்கள் வி.டி.விஜயன் - டி.எஸ்.ஜெய் கூட்டணியும் அற்புதமாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். பாடல்கள் கேட்கும்போது பழைய சிங்கம்போல் இருந்தாலும், காட்சிகளோடு பார்க்கும்போது ஓகே. ‘சிங்கம் டான்ஸ்...’ பாடலில் சூர்யா, அனுஷ்காவின் நடனம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். பின்னணி இசை, படத்தின் ஓட்டத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் ராக்கி ராஜேஷும், அனல் அரசும் ‘பத்தரை டன்’ வெயிட்டில் உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக, மழையில் நனைந்துகொண்டே எதிரிகளை சூர்யா துவம்சம் செய்யும் அந்த சண்டைக்காட்சிக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.

‘சிங்கம்’ முதல் பாகத்தில் இருந்த சென்டிமென்ட், லவ் போர்ஷன்ஸ் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. ஆனால், அதற்கும் சேர்த்து ஆக்ஷனில் விருந்து படைத்திருக்கிறார்கள். ‘லாஜிக்’ பற்றியெல்லாம் யோசிப்பதற்கு ரசிகர்களுக்கு நேரம் கொடுக்காமல் பரபரப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. இன்னும் சொல்லப்போனால் ‘லாஜிக்’ விஷயங்களையும் அற்புதமாக யோசித்துதான் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் ஹரி.

‘அம்மா அப்பா பேச்சைக் கேட்காம வேற யார் பேச்சை கேக்குறது’, ‘அவ கண்ல கண்ணீர் வந்தா என் நெஞ்சுல ரத்தம் வரும்’ போன்ற ‘நச்’ வசனங்களைக் கொடுத்த வசனகர்த்தா ஹரி, ‘ஆப்பரிக்கன் குரங்கு’ என்ற வசனத்தை மட்டும் தவிர்த்திருக்கலாமே? ஆப்பிரிக்கன் போலீஸுடன் சேர்ந்து வில்லனை சேஸ் செய்யும்போது, தேவையில்லாத அந்த பில்-டப் காட்சியும் மிகைப்படுத்தலாகவே இருக்கிறது. அதேபோல் இரண்டேமுக்கால் மணி நேரம் பரபரப்பாக செல்லும் திரைக்கதையின் க்ளைமேக்ஸ் ‘திடும்’மென முடிந்துவிடுவதும் திருப்தியளிக்கவில்லை.

மொத்தத்தில் இந்த வருடத்தின் ‘சூப்பர்ஹிட்’ படவரிசையில் ‘சிங்கம் 2’விற்கு நிச்சயம் இடமுண்டு.

(குறிப்பு : தமிழில் ‘சீக்குவல்’ படங்கள் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒன்றோடொன்று எந்த சம்பந்தமும் இல்லாமலே இருக்கும். தொடர்ச்சியான இந்த இரண்டு படங்களின் வெற்றி, அனேகமாக ஜாக்கிசானின் ‘போலீஸ் ஸ்டோரி’ போல் ‘சிங்கம்’ படவரிசை தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா - மை ட்ரீ சவால் வீடியோ


;