தி லோன் ரேஞ்சர் - ஹாலிவுட் பட விமர்சனம்

ஜானி டெப் செய்யும் சேட்டைகளுக்காக வேண்டுமானால் இப்படத்தைப் பார்க்கலாம்!

விமர்சனம் 4-Jul-2013 2:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சில படங்களின் டிரைலரும், அதில் நடித்திருப்பவர்களும் அந்தப் படத்தின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைப்பார்கள். தற்போது, வெளிவந்திருக்கும் ‘தி லோன் ரேஞ்சர்’ படமும் அந்த ரகம்தான். இருக்காதா பின்னே... மிரட்டலான டிரைலர், ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தின் வெற்றிக்கூட்டணியான நடிகர் ஜானி டெப், இயக்குனர் கோர் வெர்பின்ஸ்கி, தயாரிப்பாளர் ஜெர்ரி புருக்கீமர் டீம் என ஏகப்பட்ட பில்&டப்புகள் இருப்பதால், ‘தி லோன் ரேஞ்சர்’ ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் ஆவல் வரத்தானே செய்யும். சரி... படம் எப்படி?

படத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், ‘தி லோன் ரேஞ்சர்’ பற்றி ஒரு சின்ன ப்ளாஷ்பேக். எப்படி ‘சூப்பர்மேன்’ எனும் ஒரு கதாபாத்திரம் நாவல், ரேடியோ, டெலிவிஷன், வீடியோ கேம்ஸ், திரைப்படம் என பரிணாம வளர்ச்சி பெற்றதோ அதைப்போலத்தான் இந்த ‘லோன் ரேஞ்சர்’ கேரக்டரும்!

ஃபிராங்க் ஸ்டிரைக்கர் மற்றும் ஜார்ஜ் டிரென்டில் எனும் இரண்டு எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் 1933ஆம் ஆண்டு வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்த ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான் இந்த ‘தி லோன் ரேஞ்சர்’. எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ, அநீதி தலைவிரித்தாடுகிறதோ, அப்பாவி ஜனங்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கே முகமூடி அணிந்தபடி வந்து பிரச்சனை தீர்த்து வைப்பதுதான் ‘தி லோன் ரேஞ்சரி’ன் தலையாய கடமை. 1981-ல் வெளிவந்த ‘தி லெஜன்ட் ஆஃப் தி லோன் ரேஞ்சர்’ படம் மூலம் இந்தக் கேரக்டர் திரை வடிவத்தைப் பெற்றது. தற்போது, அதன் ஒரிஜினல் வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது இப்படம்.

‘டோன்டோ’ எனும் கோமாளித்தனமான பழங்குடி இன போர்வீரன் கேரக்டரில் ஜானி டெப்பும், ‘லோன் ரேஞ்சர்’ கேரக்டரில் ஆர்மி ஹேம்மரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்வதே இப்படத்தின் கதைக்களம். தன் கிராமத்தைச் சூறையாடிய சில சந்தர்ப்பவாதிகளை பழிவாங்கப் புறப்படும் வழியில், ஜான் ரீட் (ஆர்மி ஹேம்மர்) எனும் ஒரு இளம் வக்கீலை ஆபத்திலிருந்து காப்பாறுகிறான் டோன்டோ. அதன்பின்னர் இருவரும் நண்பர்களாக மாற, ஜான் ரீடை ‘லோன் ரேஞ்சர்’ ஆக மாற்றி, எங்கே தப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று அதை தட்டிக்கேட்கத் தொடங்குகிறான் டோன்டோ. இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள் என்பதை ஆக்ஷனும் காமெடியும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

கதை 1861ல் பயணிக்கிறது. செட் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக வடிவமைத்து நம்மை அந்தக் காலத்திற்குள்ளேயே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். முதன் முதலில் அப்போதுதான் ரயில் பயன்படுத்தப்பட்ட காலம் என்பதால், கதை பெரும்பாலும் ரயிலிலேயே பயணித்து, கடைசியில் ரயிலிலேயே முடிகிறது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாயை இப்படத்திற்காக வால்ட் டிஸ்னி செலவு செய்துள்ளது படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்க்கும்போது ஒப்புக்கொள்ள முடிகிறது.

இந்தமாதிரி கேரக்டர் என்றால் ஜானி டெப் பற்றி சொல்லவே வேண்டாம். மனிதன் பின்னியெடுத்திருக்கிறார். இறந்த காக்கா ஒன்றை தொப்பியாக தலையில் வைத்துக்கொண்டு அவர் பண்ணும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. வழக்கம்போல அவரின் டைமிங் வசனங்களுக்கும் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. ஆர்மி ஹேம்மரும் தன் பங்கை கச்சிதமாகச் செய்துள்ளார். ஏற்கெனவே அவருக்கு குதிரை சவாரி பழக்கப்பட்ட விஷயம் என்பதால், ஆக்ஷன் காட்சிகளில் சாகஸம் புரிந்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு டிரெயின் சேசிங் சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாக காட்டி நம்மை சீட்டின் விளிம்பிற்கு வரவழைக்கிறார்கள். இனி ஒவ்வொரு சீனும் ஆக்ஷனில் அடித்துத் தூள் கிளப்பப் போகிறது என எண்ணி, நிமிர்ந்து உட்கார்ந்தால்... பேசுகிறார்கள்... பேசுகிறார்கள்... பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கடைசி 20 நிமிட க்ளைமேக்ஸில்தான் நாம் எதிர்பார்த்து வந்ததை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கொஞ்சம் பேச்சைக் குறைத்து, செயலில் இன்னும் வீரத்தைக் கூட்டியிருந்தால், ‘தி லோன் ரேஞ்சர்’ படம் ஆக்ஷன் விரும்பிகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கலாம். மொத்தத்தில் ஜானி டெப் ரசிகர்களுக்கு தீனி போட வந்திருக்கிறது இப்படம். 50 வயதிலும் தனது துடிதுடிப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் ஜானி டெப் செய்யும் சேட்டைகளுக்காக வேண்டுமானால் இப்படத்தைப் பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;