‘டெஸ்பிக்கபிள் மீ 2’ - அனிமேஷன் 3டி பட விமர்சனம்

‘டெஸ்பிக்கபிள் மீ 2’ - அனிமேஷன் 3டி பட விமர்சனம்

செய்திகள் 3-Jul-2013 11:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அனிமேஷன் படங்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண கதையை மட்டும் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் வெற்றிபெறும் வித்தையைக் கற்றிருக்கிறார்கள் ஹாலிவுட் இயக்குனர்கள். அந்த வரிசையில் 2010ல் வெளிவந்து சக்கைபோடு போட்ட ‘டெஸ்பிக்கபிள் மீ’ அனிமேஷன் 3டி படத்தின் இரண்டாம் பாகம் ‘டெஸ்பிக்கபிள் மீ 2’ தற்போது வெளிவந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த முதல்பாகத்தின் சுவாரஸ்யம் இப்படத்திலும் தொடர்கிறதா?

குச்சியான கை, கால்கள், நீளமான மூக்கு என வித்தியாசமான உருவம் கொண்ட வில்லன் ‘க்ரு’, அவரின் தத்துப் பிள்ளைகளான மார்கோ, எடித், ஆக்னெஸ் மற்றும் குப்பைத்தொட்டிக்கு கை, கால் முளைத்ததுபோல் இருக்கும் மஞ்சள் கலர் ‘மினியன்’ - இவையே இப்படத்தின் பிரதான பாத்திரங்கள்.

முதல் பாகத்தில் வில்லனாக இருந்த ‘க்ரு’, இதில் தத்துப்பிள்ளைகளின் சேட்டைகளால் படாத பாடுபடும் பாசமிகு அப்பாவாக மாறியிருக்கிறார். அந்த நகரத்தில் இருக்கும் மிகப்பெரிய வில்லனான ‘எல் மாச்சோ’வைப் பிடிப்பதற்கு ‘க்ரு’வின் உதவியை நாடி வருகிறது ரகசிய காவல் படை ஒன்று. அதற்கான வேலையில் ஈடுபடும்போது, உதவிக்கு வரும் லூசி எனும் பெண் உளவாளிக்கும் ‘க்ரு’வுக்கும் இடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில், க்ருவின் சாதுவான ‘மினியன்’களைக் கடத்தி, அதை கொடூரமான கோர மினியன்களாக மாற்றுகிறான் எல் மாச்சோ. அதோடு, க்ருவின் காதலியான லூசியையும் கடத்தி தன் இடத்தில் அடைத்து வைக்கிறான்.

தன் பிள்ளைகள் மற்றும் தன்னிடம் இருக்கும் நல்ல மினியன்களை வைத்துக் கொண்டு வில்லன் எல் மாச்சோவை, க்ரு எப்படி அழிக்கிறார் என்பதே, ‘டெஸ்பிக்கபிள் மீ 2’ படத்தின் காமெடி கலாட்டா.

படம் ஆரம்பம் முதல் முடியும் வரை ‘மினியன்’களின் அட்டகாசம்தான். முட்டாள்தனமாக அது செய்யும் ஒவ்வொரு விஷயமும் தியேட்டரில் இருப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. ‘டப்பா’போல் தோன்றும் மஞ்சள் கலர் மினியன்களுக்குதான் எத்தனை விதமான முகபாவங்களைக் கொடுத்திருக்கிறார்கள். புரியாத மொழியில் அது பேசும் பாஷைகூட நம்மை கலகலப்பில் ஆழ்த்துகிறது.

அதோடு, ‘மார்கோ’வின் சிறுபிள்ளைக் காதல், கடைக்குட்டி ஆக்னெஸின் துறுதுறு சேட்டை, க்ரு & லூஸி ஜோடியின் கெமிஸ்ட்ரி என கதாபாத்திர வடிவமைப்பில் பின்னியெடுத்திருக்கிறார்கள். சாதாரணமாகவே நீளமாகத் தெரியும் க்ருவின் மூக்கு 3டியில் பார்க்கும்போது நம் முகத்தில் வந்து இடிப்பதுபோல் இருக்கிறது. அதுவும் க்ளைமேக்ஸில் லூஸியும் க்ருவும் முத்தம் கொடுக்கும்போது மூக்கும் மூக்கும் இடிக்க, அவர்கள்படும் அவஸ்தையில் நாம் மெய்மறந்து சிரிக்கலாம்.

லூஸியின் வித்தியாசமான கார், லிப்டிஸ்க்கை வைத்து எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் டெக்னிக் என இந்த ‘டெஸ்பிக்கபிள் மீ 2’வில் டெக்னாலஜியிலும் அப்டேட் செய்திருக்கிறார்கள். ‘ஹ்யூமர்’ என்ற விஷயத்தை மட்டுமே கவனத்தில் வைத்துக்கொண்டு ‘விஷுவலா’க ஜெயித்திருக்கிறார்கள் இப்படத்தின் இயக்குனர்கள் பியர் காஃபின் மற்றும் கிறிஸ் ரெனார்ட்.

முதல் பாகத்தைவிட கொஞ்சம் கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும், இப்படமும் ரசிகர்களை குதூகலப்படுத்துவதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. படம் முடிந்து திரையில் ‘என்ட் கிரெடிட்’ போடும் அந்தக் கடைசி 5 நிமிடங்களை தயவுசெய்து ‘மிஸ்’ பண்ணிவிடாதீர்கள். 3டி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அந்த நிமிடங்களே சரியான உதாரணம்.

பரபரப்பான இந்த எந்திர வாழ்க்கையில், குழந்தைகளுடன் இந்தப் படத்திற்குச் சென்று பார்த்துவிட்டு வந்தால் வெளியில் வரும்போது நாமும் ஒரு குழந்தையாக மாறியிருப்போம். ‘டெஸ்பிக்கபிள்’ என்றால் ‘வெறுக்கத்தக்கது’ என்று அர்த்தமாம். ஆனால், இந்த ‘டெஸ்பிக்கபிள் மீ 2’ அனைவரும் விரும்பத்தக்க அட்டகாசமான அனிமேஷன் படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;