விக்ரமின் ‘ஐ’ சீக்ரெட்ஸ்!

விக்ரமின் ‘ஐ’ சீக்ரெட்ஸ்!

செய்திகள் 3-Jul-2013 10:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு படத்தின் கேரக்டருக்காக உடம்பை ஏற்றி, இறக்கி தன்னையே வருத்திக்கொண்டு நடிப்பதில் கமலுக்குப் பிறகு அதிகம் பேசப்படுபவர் ‘சீயான்’ விக்ரம். பாலா இயக்கிய ‘சேது’ படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டருக்காக வாரக்கணக்கில் பட்டினி கிடந்து உடல் மெலிந்து அந்தக் கேரக்டராகவே மாறியிருந்தார். படத்தின் வெற்றியில் விக்ரமின் இந்த அபார உழைப்பிற்கும் பங்குண்டு. தமிழ்சினிமாவில் விக்ரமிற்கு மிகப்பெரிய ‘பிரேக்’கையும் கொடுத்தது ‘சேது’.

தொடர்ந்து, தான் நடித்த ‘தில்’ படத்திற்காக ஜிம்மிற்குச் சென்று ‘சிக்’கென மாறி ரசிகர்களைக் கவர்ந்தார் விக்ரம். அதன்பின்பு ‘காசி’, ‘சாமுராய்’, ‘ஜெமினி’, ‘பிதாமகன்’ என தன் உடம்பை ஒரே சீராக பராமரித்து வந்தவர், இயக்குனர் தரணியின் ‘தூள்’ படத்திற்காக முரட்டுத்தனமாக உடம்பை ஏற்றினார். பின்னர், ஷங்கரின் இயக்கத்தில் ‘அந்நியன்’ படத்திற்காக அம்பி கேரக்டருக்கு ஒருவிதமாகவும், ‘ரெமோ’ கேரக்டருக்கு ஒருமாதிரியும் உடம்பில் வித்தியாசம் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

பின்னர், ‘பீமா’ படத்தின் ரவுடி கேரக்டருக்காக மறுபடியும் ஜிம்மில் உடம்பை முறுக்கேற்றி, ‘கந்தசாமி’யின் ஐ.ஏ.எஸ். கேரக்டருக்காக உடல் மெலிந்து, மணிரத்னத்தின் ‘ராவணன்’ கேரக்டருக்காக மறுபடியும் உடம்பை ஏற்றி, அதன்பின்பு வந்த ‘தெய்வத்திருமகள்’ கேரக்டருக்காக இளைத்து, ‘ராஜபாட்டை’யில் ‘ஸ்டண்ட் மாஸ்டரா’க திரும்பவும் உடம்பை ஏற்றி... அப்பப்பா.... எத்தனை முறை உடம்பை ஏற்றி, இறக்கியுள்ளார் விக்ரம். நினைத்துப் பார்க்கும்போதே கண்ணைக் கட்டுகிறது.

இந்த விஷயங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தற்போது, தான் நடித்து வரும் ஷங்கரின் ‘ஐ’ படத்திற்காக ஒருசில காட்சிகளில் 70 கிலோவிற்கு மேலும், அதேபோல் ஒருசில இடங்களில் 50 கிலோவிற்கு கீழேயும் எடையை உயர்த்தி, குறைத்து நடித்துக்கொண்டு வருகிறாராம். இதற்காகவே விக்ரமிற்கு தனியாக உடற்பயிற்சி நிபுணர்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்திருக்கிறார்களாம். இப்படி ஒரே படத்திற்காக உடம்பை ஏற்றி இறக்க விக்ரம் ‘ஸ்டெராய்டு’ விஷங்களை கையாள்கிறார் என்று ஒரு சிலரும், இல்லை இல்லை அவர் கஷ்டப்பட்டு சாப்பாட்டைக் கூட்டி, குறைத்து உடற்பயிற்சி செய்தே சாதிக்கிறார் என்று வேறுசிலரும் சொல்கிறார்கள். எது எப்படியோ விக்ரமின் உழைப்பு அனைவரையும் மலைக்க வைக்கிறது என்பது மட்டும் உண்மை.

‘ஐ’ பட ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரின் வருகைக்காக இப்போதே தவம் கிடக்கிறார்கள் ‘சீயான்’ ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;