‘‘நெடுஞ்சாலை பெரிய பட்ஜெட் படம்’’ - ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

‘‘நெடுஞ்சாலை பெரிய பட்ஜெட் படம்’’ - ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

செய்திகள் 2-Jul-2013 3:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஃபைன் ஃபோக்கஸ் நிறுவனம் சார்பில், ஆஜூ - சௌந்தர்ராஜன் தயாரிக்க 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ‘நெடுஞ்சாலை’. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று வடபழனியில் உள்ள ‘கமலா’ திரையரங்கில் நடைபெற்றது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார். ஹலோ எஃப்.எம். பாலாஜி விழாவை தொகுத்து வழங்க, மக்கள் தொடர்பாளர் ‘மௌனம் ரவி’ வரவேற்றார்.

முன்னதாக சசிகுமார், பாக்யராஜ், அமலா பால், பிரபுசாலமன், வெங்கட்பிரபு, சசி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் படத்தின் பாடல்கள் பற்றியும் டிரைலரைப் பற்றியும் தங்களது கருத்துகளை கூறியிருந்தனர் மேலும், இயக்குனர் அமீர், சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் தாணுவும், தலா ஒவ்வொரு பாடலை வெளியிட்ட வீடியோ தொகுப்பை திரையிட்டனர்.

இயக்குனர் ‘அமீர்’ பேசும்போது,
‘‘இப்படத்தின் பாடல்கள் பார்த்தேன்... இந்தியா முழுவதிலும் லட்சம் பாடல்களுக்கு மேல் வந்துவிட்டது. புதிதாக என்ன இருக்கும் என எண்ணிதான் பார்த்தேன். பாடல்கள் இன்டர்நேஷனல் தரத்தில் உள்ளது. லொகேஷன் மற்றும் கேமரா ஒர்க் மிகவும் நன்றாக இருக்கிறது. படம் பார்ப்பவர்களை உள்ளே இழுக்கும் விதமாக பாடல் காட்சிகளும் டிரைலரும் உள்ளது” என்றார்.

விழாவில் அனைவரது கவனத்தையும் கவரும் விதமாக 7 வயது சிறுவன் ’லிடியன் நாதஸ்வரம்’ ட்ரம்ஸ் வாசித்து அனைவரது கைதட்டல்களையும் பெற்றான். ஆரி, ஷிவதா நடித்த மான்டேஜ் பாடல் அனைத்து சேனல்களிலும் வலம் வரும். இப்பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் மிகவும் அருமையாக இருந்ததாக விழாவிற்கு வந்தவர்கள் தெரிவித்தார்கள்.

விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியபோது...
“இயக்குனர் கிருஷ்ணாவிடம் இந்தப் படத்தில் பெர்ஷனலா பிடித்த விஷயம் புதுமுகங்களை அறிமுகப் படுத்தியதுதான். ஹீரோ, ஹீரோயின், பாடலாசிரியர், பாடகர் என பலரை அவர் அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு தைரியமும் உறுதியும் வேண்டும். அது எனக்கு பிடிச்சிருந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சத்யாவை நான் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அறிமுகப்படுத்தும் முன்பு, கிருஷ்ணாதான் அவருடன் ஒரு படம் பண்ணினார். அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுத்தான் இயக்குனர் சரவணன், சத்யாவை என் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அவருக்கு சினிமாவில் நல்ல இடம் இருக்கு. யாரை பாராட்டுறதுன்னே தெரியல. ஒருவருக்கு ஒருவர் போட்டிபோட்டு பிரமாதமா வேலை எல்லோருமே செய்திருக்காங்க.

1990களில் உதவி இயக்குனராக இருந்தபோது தங்குவதற்கு அறை தேடினேன். சென்னையிலே பேச்சுலருக்கு இடம் கிடைக்கிறது கஷ்டம். இருந்தாலும் டாக்டர் சுப்பராயன் நகரில் தங்குவதற்கு அறை எடுத்து தங்கினேன். அதற்குக் காரணம் அங்குதான் ரஹ்மான் சாரோட ரெக்கார்டிங்க் ஸ்டுடியோ இருந்தது.

என் அறையின் மொட்டை மாடியில் நின்று பார்த்தால் ரஹ்மான் சாரின் ஸ்டுடியோ தெரியும். இரவில் சுப்பராயன் நகரே இருளில் இருக்கும் போது அவரது ஸ்டுடியோ மட்டும் வெளிச்சமாக இருக்கும்.

‘இப்போது எந்த படத்துக்கு டியூன் போட்டுகிட்டிருப்பாரு’ன்னு யோசிப்பேன். என் ரூமில் இருந்து அவரோட ஆபிஸுக்கு இஞ்ச் இஞ்சா போறதுக்கு எட்டு வருஷமாயிருச்சு. ஹிந்தி ‘கஜினி’யில் வேலை செய்தபோது பழகிய அந்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம். சத்யா அவரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு வரணும்.

இயக்குனர் கிருஷ்ணாவும் நிறைய போராடி வந்திருக்கிறார். நிறுத்தத்தைத் தாண்டி பஸ் நிக்கும் போது, பஸ்ஸைப் பிடிக்க ஒருவன் ஓடுவான். அந்த பஸ் புறப்பட்டுச்சுன்னா அவன் பின்னாலே ஓடிப்போய் துரத்தி பிடிச்சி பஸ்ல ஏறுவான். அவன் பஸ்ஸை பிடிக்க வேண்டும் என்று அங்கு நிற்பவர்கள் நினைப்பார்கள். அது மாதிரி கிருஷ்ணாவை நான் பார்க்கிறேன். இந்த நெடுஞ்சாலையை பிடிச்சி அவர் வேகமா போகணும். என்னுடைய வாழ்த்துக்கள்’’ இவ்வாறு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.

பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது...
‘‘முருகதாஸ் நிறைய உண்மை சொன்னார். என்னோட ஆபீஸ் பக்கத்தில ரூம் எடுத்தது பற்றி...’’ எனச் சொல்லி சிரித்துக்கொண்டே முருகதாஸைப் பார்த்தார்.

‘‘தயாரிப்பாளர் தாணு சார் மூலமாக எனக்கு இயக்குனர் கிருஷ்ணா அறிமுகமானார். அவர் கதை சொல்லும் போது எமோஷனலாக சொல்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. பெரிய பட்ஜெட் படத்தைப் போல இந்தப் படத்தை குவாலிட்டியா பெரிய புரஜக்டா எடுத்திருக்கிறார். இந்தியில இது மாதிரி பண்ணினால் இப்படத்தின் பத்து மடங்கு ஆகும். ஆர்வமும் திறமையும் இருந்தாதான் இது மாதிரி பண்ண முடியும். இந்தப் படத்துல அவரோட கடுமையான உழைப்பு தெரிகிறது’’ என இயக்குனர் கிருஷ்ணாவைப் பாராட்டினார்.

படத்தின் இயக்குனர் கிருஷ்ணா பேசும்போது,
‘‘ரஹ்மானின் ஸ்டுடியோவுக்குள் போகும்போது கோவிலுக்குள் செல்வது போன்ற உணர்வு இருக்கும். ‘சில்லுன்னு ஒரு காதல்’ படம் செய்தபோது ஒன்றரை ஆண்டு அவரிடம் பழகியிருக்கேன். இரவு பகல் தூங்காமல் வேலை செய்வார். ‘எப்போது தூங்குவீர்கள்’ என்று கேட்பேன். ‘நாற்பது வயது ஆயிடுச்சு ஏதாவது செய்யணும்’ என்பார். அந்த உழைப்புக்குத்தான் இரண்டு ஆஸ்கார் விருது பெற்றார்.

இயக்குனர் முருகதாஸ் படங்கள்தான் எனக்கு ‘நெடுஞ்சாலை’ படத்தை கமர்சியலாக செய்ய இப்ம்ரஸ் செய்தது. அதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

விழாவில் இயக்குனர் பிரபுசாலமன், சமுத்திரகனி, ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், தாமிரா, நடிகை காயத்ரி மற்றும் தயாரிப்பாளர் தாணு, கமலா தியேட்டர் அதிபர் சித.வள்ளியப்பன், சுவாமிநாதன், ‘சாட்டை’ தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் மற்றும் ஜெர்ரி, ஒளிப்பதிவாளர் ஜீவன், ராஜ்வேல் ஒலிவீரன், கலை இயக்குனர் சந்தானம், பாடலாசிரியர்கள் மணி அமுதவன், கார்த்திக் நேத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். பாக்யராஜ் வரமுடியாததால் மலர்கொத்தை கொடுத்தனுப்பி வாழ்த்தினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;