கல்விச் சேவையில் சிவகுமார் குடும்பம்!

கல்விச் சேவையில் சிவகுமார் குடும்பம்!

செய்திகள் 1-Jul-2013 11:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலமாக மாநிலத்தில் பிளஸ் டூ பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவியருக்கு வருடந்தோறும் பரிசு வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 33 ஆண்டுகளைத் தொடர்ந்து 34-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த வருடத்திற்கான விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தலா ரூபாய் 10,000 வீதம், 25 மாணவ மாணவியருக்கு மொத்தம் 2,50,000 ரூபாய் பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான தாய் தமிழ் பள்ளிக்கு 1 லட்சமும், முதல் முறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்திற்கு 2 லட்சமும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய சிவகுமார்,
‘’1979 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து பிள்ஸ் டூ தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை அதற்குப் பிறகு ‘அகரம் ஃபவுண்டேஷன்’ பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கை தரத்தை எந்த அளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல் ஏழை குடும்பத்தில் பிறந்த, நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு உதவி செய்வதில் மிகுந்த மனநிறைவு பெறுகிறேன். மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல் தொடர்ந்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’’ என்றார்.

விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்து மேலும் கல்விக்காக பாடுபடும் இரண்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்தார் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா பேசும்போது
‘’குடும்ப விழாவை போல் ஆண்டு தோறும் அப்பா நடத்திய நிகழ்ச்சியை பார்த்து எங்களுக்கும் அதேபோல செய்யும் ஆர்வம் வந்தது. வேறு உதவிகளை விட கல்விக்கு செய்கிற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் பணியையும் சேர்த்து எங்களுடைய கல்வி பணியை விரிவாக்கிக் கொண்டோம். அப்பா செய்த பணிகளிலிருந்து சில மடங்காவது அதிகம் செய்தால் அது வளர்ச்சி. நடிகர் சூர்யாஅகரம் ஃபவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறது. 650-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்லூரி கனவை பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம்’’ என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய நடிகர் கார்த்தி, ‘’அப்பா, அண்ணன் ஆகியோரின் நற்பணிகளுக்கு முன்னால் நான் செய்வதெல்லாம் சின்னதாகவே தெரிகிறது. அப்பாவை விட, அண்ணன் நிறயை செய்தால் அது வளர்ச்சி. நானும் அண்ணனை விட பிறருக்கு நிறைய உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சின்ன வயதில் இருந்தே வீட்டில் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து வளர்த்தார்கள். பெற்றோர்களுக்குப் பிறகு இப்போது பிள்ளைகளான நாங்கள் அதிகமாக செய்ய வேண்டியது கடமை’’ என்றார்.

நிகழ்ச்சியை, சிவகுமாரின் மகள் பிருந்தா இறைவணக்கம் பாடி துவக்கி வைத்தவர். நிகழ்ச்சியை அகரம் ஃபவுண்டேஷனின் செயலாளர் ஜெயஸ்ரீ தொகுத்து வழங்க, இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நன்றி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;