அம்பிகாபதி - விமர்சனம்

‘டெக்னிக்’கலாக அம்பிகாபதி வெற்றிக்கூட்டணி அமைத்திருக்கிறது.

விமர்சனம் 29-Jun-2013 12:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷின் முதல் ஹிந்திப் படமான ‘ரான்ஜ்னா’ தமிழில் ‘அம்பிகாபதி’.

காதலிச்ச பொண்ணு கிடைக்கிறதுக்காக எதை வேணும்னாலும் செய்யத்துணியுற காதலன், கடைசில அவளுக்காகவே உயிரையும் விடுகிறான்கிறதுதான் ‘அம்பிகாபதி’.

சின்ன வயதில் தான் பார்த்த முதல் சந்திப்பிலேயே ஸோயாவை (சோனம் கபூர்) நேசிக்க ஆரம்பிக்கிறான் காசியில் வசிக்கும் குந்தன் (தனுஷ்). கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் தன் காதலை, ஸோயாவிடம் வெளிப்படுத்துகிறான். ஆரம்பித்தில் கொஞ்சம் ‘பிகு’ பண்ணும் ஸோயா, குந்தனின் அன்பில் மயங்கி அவளும் காதலில் விழுகிறாள். இந்த விஷயம் ஸோயாவின் வீட்டுக்குத் தெரிந்துவிட, இந்துப் பையன் குந்தனிடமிருந்து தன் மகளைப் பிரித்து டெல்லிக்கு படிக்க அனுப்பி வைக்கிறது ஸோயாவின் முஸ்லிம் குடும்பம்.

டெல்லியில் படித்துமுடித்துவிட்டு திரும்பி வரும்வரை ஸோவையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் குந்தன். ஆனால், ஸோயா காசிக்கு திரும்பி வந்ததும், தான் வேறொருவனைக் காதலிப்பதாகச் சொல்லி, குந்தனுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி கொடுக்கிறாள். தன் காதலைச் சேர்த்து வைக்க குந்தனிடமே உதவி கேட்க, குந்தனும் அதற்குச் சம்மதிக்கிறான். அதோடு... ஸோயாவின் திருமணம் நிச்சயிக்கப்படும் அதேநாளில், தன்னை சிறுவயதிலிருந்து ஒருதலையாகக் காதலிக்கும் பிந்தியாவிற்கும் குந்தனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இதன் பிறகு நடக்கும் சுவாரஸ்யங்கள்தான் அம்பிகாபதியின் இரண்டாம் பாதி.

காலம் காலமாக நாம் பார்த்துப் பழகிய அதே காதல் கதைதான். ஆனால், புதிய காட்சியமைப்புகளின் மூலம் நம்மை கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார்கள். இந்து - முஸ்லிம் காதலர்களின் பிரச்சனைக்கு, ‘மத’ விஷயங்களைத் தவிர்த்துவிட்டு ‘மத்த’ விஷயங்களில் கவனம் செலுத்தியதற்காகவே இயக்குனர் ஆனந்த் எல்.ராய்யை நிச்சயம் பாராட்டலாம். படம் தொடங்கியதிலிருந்து இடைவேளை வரை செம ஸ்பீடு. குந்தனின் குழந்தைப் பருவ குரும்பு, பிந்தியாவின் ஒருதலைக் காதல், வரம்புமீறாத குந்தன் - ஸோயா காதல் நெருக்கம் என முதல்பாதி முழுக்க குடும்பத்துடன் ரசிக்க முடியும் கவிதை அழகு.

தன் காதலைச் சொல்லி சோனம் கபூரிடம் தனுஷ் அறை வாங்குவது, காதலில் தோற்கும் ஒவ்வொரு முறையும் கையை அறுத்துவிட்டு ஆஸ்பிடலில் அட்மிட் ஆவது, வண்டியோடு சேர்த்து சோனம் கபூரும் தனுஷும் ஆற்றில் விழும் காட்சி, ஸோயாவின் காதலைச் சேர்த்துவைத்துவிட்டு அவளிடம் தனுஷ் சவால்விடும் காட்சி என படம் நெடுக ஆங்காங்கே சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள்.

முதல்பாதியில் நட்பு, காதல், பிரிவு எனச் சொல்லும் திரைக்கதை இரண்டாம் பாதிமுழுக்க அரசியல் வாடையோடு பயணிக்கிறது. இடைவேளை வரை தமிழ்ப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வைக் கொடுத்த ‘அம்பிகாபதி’ அதன்பின்பு, தான் ‘ஹிந்தி’ வெர்ஷன் என்பதை நிரூபிக்கிறது.

தனுஷ், தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை இப்படத்திலும் நிரூபித்திருக்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய தனுஷின் மாடுலேஷன்கள்தான் என்றாலும், இப்படத்தில் அது இன்னும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறது. சோனம் கபூர், முரளியாக நடித்திருக்கும் முகம்மது ஸீஷன், துறுதுறு பிந்தியாவாக வரும் ஸ்வாரா பாஸ்கர், அபய் தியோல் என ஒவ்வொரு கேரக்டரும் தங்களின் பங்களிப்பை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஏ.ஆர்.ரஹ்மான் ராக்ஸ். சில பாடல்கள் மட்டும் தமிழில் கேட்கும்போது காட்சியோடு ஒட்டவில்லை. காசியின் மொத்த அழகையும், சோனம் கபூர் - தனுஷின் நெருக்கத்தையும் தன் கேமரா மூலம் அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நடராஜன் சுப்ரமணியம். தமிழில் வசனம் எழுதியவருக்கும் ஒரு ‘ஜே’ போடலாம். மொத்தத்தில் ‘டெக்னிக்’கலாக அம்பிகாபதி வெற்றிக்கூட்டணி அமைத்திருக்கிறது.

படத்தின் பலவீனம் என்று பார்த்தால், அரசியல் காட்சிகள் எதுவும் நமக்குப் பரிச்சயமாக இல்லை. அதேபோல் சோனம் கபூரின் காதல் காட்சிகளிலும் சில இடங்களில் நம்மை குழப்புகிறார்கள். முதல் பாதி முழுக்க துறு துறு காதலுடன் சென்ற படம், இரண்டாம் பாதியில் வேறொரு தளத்திற்குச் செல்வதால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. சில இடங்களில் ‘கோ’, ‘ஆயுதஎழுத்து’ போன்ற படங்களின் ஞாபகங்களும் நமக்கு வந்து போகிறது. முழுக்க முழுக்க காதல் படமாக எடுத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம்.

ப்ளஸ் : படத்தின் முதல் பாதி காதல், காமெடிக் காட்சிகள், தனுஷின் உற்சாகமான நடிப்பு, பாடல்கள், வசனம், ஒளிப்பதிவு

மைனஸ் : இரண்டாம்பாதியில் தொய்வடையும் திரைக்கதை, ‘டப்பிங்’ உணர்வைக் கொடுக்கும் அரசியல் காட்சிகள், சில லாஜிக் இல்லாத காட்சியமைப்புகள்

மொத்தத்தில் : ‘தனுஷ் கலக்கிட்டான்யா’, ‘பரவால்ல பார்க்கலாம்ல...’, ‘தமிழ் படம் மாதிரி இல்லை...’, ‘ஏ.ஆர்.ரஹ்மான் பின்னிட்டாருப்பா’, ‘நல்லாதான் எடுத்திருக்காங்க’ - இதுபோன்ற ரசிகர்களின் பேச்சுக்களை படம் முடிந்து வெளியேவரும்போது கேட்க முடிகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;