‘மிர்ச்சி’ சிவாவை கலங்கடித்த பவர்ஸ்டார்!

‘மிர்ச்சி’ சிவாவை கலங்கடித்த பவர்ஸ்டார்!

செய்திகள் 19-Jun-2013 5:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிவா - சந்தானம் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘தில்லு முல்லு’ படம், தியேட்டரில் ‘தள்ளு முள்ளு’ ஆகும் அளவிற்கு ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதே அதிரடிக் காம்பினேஷன் ‘யா யா’ படத்தின் மூலம் மீண்டும் ‘கிச்சு கிச்சு’ மூட்ட வர இருக்கிறார்கள். ‘எஸ்எம்எஸ்’ ராஜேஷின் உதவியாளர் ஐ.ராஜசேகரன் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை, எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். இவர் ‘ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தில் 20 ஆண்டு காலம் புரொடக்ஷன் மேனேஜராக இருந்து, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் மிர்ச்சி சிவா, சந்தானம் ஆகியோரோடு தன்ஷிகா, சந்தியா, பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் நடித்திருக்க்கிறார்கள். இப்படத்தின் இசைவெளியீடு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது...

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிரைலர்...
இந்த விழாவின் முதல்கட்டமாக படத்தின் டீஸர், இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இப்படத்தில் மிர்ச்சி சிவா ‘தோனி’ என்ற பெயரிலும், சந்தானம் ‘சேவாக்’ என்ற பெயரிலும் நடித்திருக்கிறார்கள். டிரைலரின் ஒரு காட்சியில்... சிவா சந்தானத்திடம் ‘‘ஸாரி சொன்னா எல்லாம் போய்டுவாங்களா?’’ என சீரியஸாக கேட்க, அதற்கு சந்தானம், ‘‘அப்டினா ஆளுக்கு ரெண்டு செட் பூரி சொன்னா போய்டுவாங்களா?’’ என வழக்கம்போல் தனது பாணியில் கவுன்ட்டர் கொடுக்க, மொத்த தியேட்டரும் குலுங்கியது.

அதேபோல், இன்னொரு காட்சியில் சிவாவிடம் தன்ஷிகா...
‘‘உன்ன என்னால லவ் பண்ண முடியாது!’’ என கோபமாகச் சொல்ல, அதற்கு சிவா ‘‘நீங்க லவ் பண்ணலைனாலும் பரவால்ல... நீங்களே வேற ஒரு பொண்ணப் பார்த்து செட் பண்ணிவிட்ருங்க! இனிமே என்னால ரிஸ்க் எடுக்க முடியாது’’ என அப்பாவியாகச் சொன்னதும், தியேட்டரில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமாகியது.

பிரபலங்களின் படையெடுப்பு...
இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, டி.ராமாராவ், கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், எம்.எஸ்.முருகராஜ், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், சுந்தர்.சி, ஹரி, ராஜேஷ், பாண்டிராஜ், ‘தில்லு முல்லு’ இயக்குனர் பத்ரி, ‘யா யா’ படத்தின் இயக்குனர் ஐ.ராஜசேகரன், நடிகர் மிர்ச்சி சிவா, நடிகை தன்ஷிகா, இசையமைப்பாளர் விஜய் எபினேஷர், பாடலாசிரியர் விவேகா ஆகியோர் உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வந்திருந்து சிறப்பித்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ‘யா யா’ படத்தின் இசைக் குறுந்தகடை தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, டி.ராமாராவ் ஆகியோர் வெளியிட, அதை இயக்குனர்கள் எஸ்.ஏ.சி, சுந்தர்.சி, ஹரி, ராஜேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதன் பின்னர் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள். அதில் சில சுவாரஸ்யங்கள்...

மிரளும் பெரிய படங்கள்...
இயக்குனர் ஹரி, ‘‘இன்னைக்கு இருக்கிற சூழ்நிலைல பெரிய படங்கள்லாம், சின்னப் படங்களப் பார்த்து மிரள வேண்டியிருக்கு... சின்ன சின்ன படங்கள்லாம் பெரிய அளவுல ஜெயிக்குது. அதேமாதிரி புதுப்புது இயக்குனர்களும் சாதிச்சுக்கிட்டு வர்றாங்க. இந்தப் படத்தோட டிரைலர் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருந்தது. அதிலேயும் கடைசில பவர்ஸ்டார் வர்ற சீனுக்கு மொத்த தியேட்டரும் விசிலடிச்சு ரசிச்சாங்க. இந்தப் படம் ஜெயிக்கும்ங்கிறது இப்பவே தெரியுது’’ என்றார்.

உதவி இயக்குனர்களை அடித்த எஸ்.ஏ.சி!
விழாவிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு மைக்கைப் பிடித்த எஸ்.ஏ.சி. ‘‘எனக்கு ஒரு ராசி இருக்கு. என்கிட்ட அடி வாங்குகிற உதவி இயக்குனர்கள் பெரிய ஆளா வருவாங்க. அடிக்கிறதுனா, புள்ளைங்க மேல கோபம் வந்தா அடிப்போமே... அதுமாதிரி, செல்லமா தட்டுறது! தப்பா எடுத்துக்காதீங்க. என்கிட்ட உதவி இயக்குனரா இருந்தப்போ ராஜேஷ்ஷும், ராஜசேகரனும் இப்படி அடி வாங்கியிருக்காங்க. அதுனால ‘யா யா’ படத்தின் இயக்குனரும் பெரிய இயக்குனரா வருவாரு’’ என ஒரே போடாக போட்டார்.

குருவுக்கு கவுன்ட்டர் கொடுத்த சிஷ்யன்!
எஸ்.ஏ.சி.க்குப்பிறகு பேசிய இயக்குனர் ராஜேஷ் ‘‘எஸ்.ஏ.சி சார் சொன்னாரு... அவர்கிட்ட வேலைபார்த்தவங்களே லேசா அடிப்பேன்னு. அவர்கிட்ட அடிவாங்குனவங்களுக்குதான் தெரியும், அது எவ்வளவு ‘லேசா’ன அடின்னு...’’ என்று சொல்லிவிட்டு சிரிக்க, அவரோடு சேர்ந்து மொத்த அரங்கமும் சிரித்தது.

கிறிஸ் கெய்லும்... பொல்லார்டும்!
‘தீயா வேலை செய்யும்’ இயக்குனர் சுந்தர்.சி ‘‘இந்தப் படத்தோட டிரைலரப் பார்த்ததும் எனக்கு ஒண்ணு தோணிச்சு. கிறிஸ் கெய்லும், பொல்லார்டும் ஃபுல் ஃபார்ம்ல விளையாடிக்கிட்டிருந்தா எப்படி இருக்குமோ, அதுமாதிரி இருந்தது சிவாவையும், சந்தானத்தையும் பார்த்தப்போ!’’ என்றார்.

சிவாவை கலங்கடித்த பவர்ஸ்டார்!
கடைசியாக வந்த ‘யா யா’ படத்தின் நாயகன் சிவா, ‘‘நான் ஒவ்வொரு படத்துல ஒர்க் பண்ணும்போதும் ஒவ்வொரு அனுபவம் எனக்கு கிடைக்சிருக்கு. அப்டி இந்தப் படத்துல ஒர்க் பண்ணதுல ஒரு ஹாலிவுட் ஸ்டார்கூட ஒர்க் பண்ண ஒரு ஃபீல் எனக்கு கிடைச்சது. அவருதான் நம்ம பவர்ஸ்டார். ஏன்னா அவர் என்ன பணறாருன்னு யாருக்குமே புரியாது...

உதாரணத்துக்கு ஒரு சீன்ல, பவர்ஸ்டார் ரோட்ல நடந்து போய்கிட்டிருப்பாரு, அப்போ ஓடிவந்து நான் அவர்கிட்ட ‘‘ஏண்ணே... சோகமாக போறீங்க!’’ அப்டின்னு கேட்பேன். அதுக்கு அவரு, ‘‘எல்லாமே அவன்தான்! அந்த சேவாக்’’ அப்டின்னு சொல்லணும். இதான் டயலாக். ஷாட் ரெடியாயிருச்சு... நானும் ஓடி வந்து அவர்கிட்ட ‘‘ஏண்ணே... சோகமாக போறீங்க!’’ கேட்கிறேன். அதுக்கு பவர்ஸ்டார் சொன்னாரு ‘‘எல்லாமே அவன்தான்! அந்த கேசவன்!’’ அப்டின்னுட்டாரு. எனக்கு ஒண்ணுமே புரியலே. என்னடா இவரு... ‘சேவாக்’க மாத்தி சொல்லணும்னா சச்சின், டிராவிட்டுனுதான் நாமெல்லாம் சொல்லுவோம். இவரு என்னடான்னா சம்பந்தமேயில்லாம ‘கேசவன்’ங்கிறாரேன்னு. ஆனா... அதான் பவர்ஸ்டார். அவரோட கெட்ட நேரம் கொஞ்சம் அஃபீஸியலா டெல்லி வரைக்கும் போயிருக்காரு. நல்லவேளை படத்தோட டப்பிங்லாம் முடிஞ்சிருச்சு’’ என பவர்ஸ்டார் ஜெயிலில் இருப்பதை கலாய்த்த சிவா, மீண்டும் தொடர்ந்தார்...

‘‘அதுகூட பரவாயில்லைங்க... ஒருநாள் ஷூட்டிங் பிரேக்ல அவரும் நானும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். அதப்பார்த்துட்டு பவர்ஸ்டார், ‘‘சிவா நீயும் நானும் அண்ணன் தம்பி மாதிரி இருக்கோம்ல’’ன்னு சொன்னாரு. எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு. ஒரு மணி நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப குழப்பத்துல இருந்தேன். அதுவுமில்லாம எனக்கு டெல்லிலாம் போற ஆசை இல்லைங்க. நான் இங்கேயே இருந்துடுறேன்’’ என படத்தில் வசனம் பேசுவதுபோல் அவர் பேச, அவரின் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்கள்.

இறுதியாக நன்றியுரை வாசிக்க, விழா இனிதா நிறைவு பெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;