மணிவண்ணனுக்கு போர்த்திய புலிக்கொடியிலும் சர்ச்சை?

மணிவண்ணனுக்கு போர்த்திய புலிக்கொடியிலும் சர்ச்சை?

செய்திகள் 19-Jun-2013 1:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மறைந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் உடல் நேற்று மாலை சென்னை போரூரில் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளும் , திரையுலகினரும் , தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அதுமட்டுமன்றி கனடா, லண்டன் உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. கனடாவில் கனடிய தமிழர் தேசிய அவை, நாம் தமிழர் என இரு வேறுபட்ட அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க மணிவண்ணன் இறந்த உடனேயே அவரது கடைசி ஆசையாக தன மீது புலிக்கொடி போர்த்த வேண்டும் என அவர் பேசிய காணொளிகள் வெளியாகின. மணிவண்ணின் இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவர் கேட்டுக் கொண்டபடி உடலின் மீது தமது கட்சிக் கொடியை போர்த்தியிருந்தார் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான்.

ஆனால் பெரும்பான்மையான ஊடகங்கள் மணிவண்ணனின் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது என பதிவு செய்திருந்தார்கள். ஊடகங்கள் ஒன்றைப் பதிவு செய்யும் பொது அது சரியானதாக இருக்க வேண்டும். ஊடகங்களில் புலிக்கொடி மனிவண்ணன் மீது போர்த்தப்பட்டதாக எழுதப்பட்ட விடயம் பாமர மக்களைப் பொருத்த வரையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கொடியோ அல்லது தமிழீழ தேசியக் கொடியோ தான் அவர் மீது போர்த்தப்பட்டதான ஒரு தோற்றத்தையே உண்டாக்கியுள்ளது.

மணிவண்ணன் மீது போர்த்தப்பட்டது தமிழீழ தேசியக் கொடி அல்ல, சீமானின் நாம் தமிழர் கட்சிக் கொடி தான் அது. தமிழ் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியும் , தமிழீழ தேசியக் கொடியும், நாம் தமிழர் கட்சிக் கொடியும் வெவ்வேறானவை. தேசத்துரோகியான பிள்ளையான் மற்றும் கருணா கூட தனது கட்சிக் கொடியில் புலியை சின்னமாக வைத்து வடிவமைத்துள்ளார். எனவே புலி இடம் பெற்றுள்ள கொடிகளை அனைத்தும் ஒட்டுமொத்தமாக தேசியக்கொடி என ஆவணமாக பதிவு செய்யக் கூடாது. இது வருங்காலங்களில் தவறான முன்னுதாரணங்களை நம் இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

அது மட்டுமன்றி நமது தமிழீழ தேசியக் கொடிக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தினால் உருவாக்கப்பட்ட கொடி இது. கொடியின், நிறம், படம் என அனைத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. கொடியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு விதிமுறைகளும் உண்டு.

மக்களை விடுதலை இயக்கத்தின்பால் ஈர்த்து அணி திரளவைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இலட்சினையான பாயும் புலியே எமது தேசியக்கொடியின் நடுவில் அமைந்திருக்கிறது.

எமது தேசியக்கொடியை மஞ்சள்,சிவப்பு,கறுப்பு,வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.

தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்குத் தன்னாட்சி(சுயநிர்ணய)உரிமை உண்டு.இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை.தமது தாயகத்தை மீட்டெடுத்து,தன்னாட்சி உரிமையை நாட்டுவதற்கு தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது.மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கின்றது.

ஏற்றத் தாழ்வுகளற்ற, வர்க்க, சாதிய, முரண்பாடுகளற்ற பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிப்பாங்கான அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

கரடுமுரடான, சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்த வழிக்கூடாகச் சென்று எமது இலக்கை அடைவதற்கு வேண்டிய உருக்குப்போன்ற உள்ள உறுதியைக் கறுப்பு நிறம் குறித்துக்காட்டுகின்றது.

அமைப்பினதும் போராட்டத்தினதும் தூய்மையை, நேர்மையை வெள்ளை நிறம் வெளிப்படுத்தி நிற்கின்றது. நமது தேசியக் கொடியை உயிரிலும் மேலாகப் போற்றிப் பேணிப்பாதுகாப்பது நமது தலையாய கடமைகளில் ஒன்றாகும்.

விதிமுறைகளின் படி பார்த்தால் தாயகத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு தமிழீழ தேசியக் கோடி போர்த்தப்படுதல் மட்டுமே சரியான அணுகுமுறை. மணிவண்ணனும் தனது கடைசி ஆசையில் சீமானிடமிருந்த புலிக்கொடியைத் தான் கேட்டுள்ளாரே தவிர தேசியக் கொடியை அல்ல. அதன் மகத்துவத்தை நன்கறிந்தவர் அவர்.

எனவே பொத்தாம் பொதுவாக பிற கட்சிகளின் கொடிகளை எல்லாம் புலிக்கொடி என்றோ, தேசியக்கொடி என்றோ ஆவணப்படுத்துவதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.

அதே வேளையில் லண்டனிலும், கனடாவில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்றுள்ள இரங்கல் நிகழ்விலும் மேசை மீது தேசியக்கொடி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி : ‘கனடா மிரர்’ இணையதளம்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;