மணிவண்ணன் நட்பு குறித்த நடிகர் சிவகுமாரின் நினைவலைகள்...

மணிவண்ணன் நட்பு குறித்த நடிகர் சிவகுமாரின் நினைவலைகள்...

செய்திகள் 15-Jun-2013 2:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தன் ஊர்க்காரராகவும், சினிமாவில் தன்னுடைய இணைபிரியாத நண்பராகவும் இருந்த இயக்குனர் மணிவண்ணனுடனான தனது நினைவுகளை இன்று பகிர்ந்துகொண்டார் நடிகர் சிவகுமார்.

‘‘வேற யாரும் சொல்ல முடியாத விஷயத்தை என்னாலதான் சொல்ல முடியும். அவர் வந்து எங்க ஊர்க்காரரு... கோவை மாவட்டத்துல சூலூருதான் அவரு சொந்த ஊரு. நான் சின்ன வயசுல சூலூர்லதான் படிச்சேன். மணிவண்ணனுடைய தந்தையார் சூலூர்ல ‘மணியம் ஸ்டோர்ஸ்’னு ஒரு ஜவுளிக்கடை வச்சிருந்தாரு. அந்தக்கடையிலதான் நான், என் சகோதரிலாம் துணி எடுத்து டிரஸ் தைச்சுக்குவோம்.

அப்புறம் நான் சினிமாவுல பிஸியாயிருந்த காலத்துல, மணிவண்ணன்னு ஒரு டைரக்டர் வந்துக்காருன்னு சொன்னாங்க. யாருன்னு விசாரிச்சப்போ, நம்மூரு ‘மணியம்’மோட பையன்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்தது. இயக்குனர் இமயம் பாரதிராஜாவோட பிராமிஸிங் சீடர்கள்ல மணிவண்ணனும், பாக்யராஜும் ரெணடு மறக்க முடியாத இயக்குனர்கள். அவருடைய ‘விடிஞ்சா கல்யாணம், நூறாவது நாள், அமைதிப்படை’ அப்புறம் நானும் நடிச்ச ‘இனி ஒரு சுந்தந்திரம்’ ஆகிய படங்கள்லாம் ரொம்ப வித்தியாசமாக ரசிக்கக்கூடிய படங்களா கருதக்கூடியவை.

இயக்குனரா மட்டுமில்லாம நல்ல நடிகராவும் மணிவண்ணன் இருந்தாரு. அவர் நினைச்சிருந்தாருன உடம்பை இன்னும் நல்லா பேணி ஆரோக்கியமா இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்க முடியும். இவ்வளவு விரைவாக அவர் விடைபெற்றுக் கொண்டது ரொம்பவும் வருத்தமா இருக்கு.

அடிப்படைல மணிவண்ணன் ஒரு கம்யூனிஸ்ட். சத்யராஜும் அவரும் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சிக்கிட்டிருந்தப்ப, கம்யூனிஸ்ட்டுகளோடு அறிக்கை நோட்டீஸ்களை திருப்பூர்லயிருந்து பொள்ளாச்சிக்கு 30 மைல் நடந்து போயி விநியோகம் பண்ணுவாராம். அதுனாலதான் அவரோட படங்கள்ல கம்யூனிஸ்ட் கருத்துக்கள ரொம்ப வலிமையா சொல்லிருப்பாரு.

மணிவண்ணன் ரொம்ப தங்கமான மனிதர். அவர்கூட நான் பண்ணின ‘இனி ஒரு சுந்ததிரம்’ படம் என்னால மறக்க முடியாத ஒரு அனுபவம். அந்தப் படத்துக்கு அவர் கதை சொன்னபோதே எனக்கு ரொம்பவும் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அந்தப் படம் வெளிவந்து, அதைப் பார்த்துவிட்டு சிவாஜி, ‘டேய் கவுண்டரே நீ பிரமாதமா பண்ணியிருக்க... நம்ம மக்கள்கிட்ட நாட்டுப் பற்றெல்லாம் எதிர்பார்க்காத. நானும் ‘கப்பலோட்டிய தமிழன்’னு ஒரு படம் பண்ணேன். ஆனா, தமிழ்நாட்டு மக்கள் நாமம் போட்டாங்க... உனக்கும் நாமத்தை கரைச்சுட்டிருக்காங்க’ன்னு வேடிக்கையா சொன்னாராம்.

சினிமா தவிர்த்து, மணிவண்ணன் ஈழத்தமிழர்கள் மேலயும் மாறாத அன்பு கொண்டவர். அவர்களுக்காக பல போராட்டங்கள்லயும் பங்கெடுத்துருக்காரு.. இப்படிப்பட்ட ஒரு அருமையான மனிதரை நாம இழந்துட்டோம்ங்கிறது ரொம்பவும் கஷ்டமா இருக்கு’’ என தனது நினைவுகளையும், இரங்கலையும் தெரிவித்தார் நடிகர் சிவகுமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;