சோகத்தில் ஆழ்த்திய ‘மணி’ அண்ணன்!

சோகத்தில் ஆழ்த்திய ‘மணி’ அண்ணன்!

செய்திகள் 15-Jun-2013 1:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோயம்புத்தூரில் பிறந்து, பாரதிராஜாவின் உதவியாளராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய மணிவண்ணன், ‘நிழல்கள்’ படத்திற்கு கதை எழுதியதன் மூலம் கதாசிரியராக தமிழ்சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்பு, அவர் கதை எழுதி பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.

1982-ல், மோகன் & சுஹாசினி நடிப்பில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த மணிவண்ணன், ‘நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், புதுவசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி, தெற்குத்தெரு மச்சான்’ போன்ற படங்கள் மூலம் தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக மாறினார். மணிவண்ணனும் அவரது நண்பரான சத்யராஜும் பல படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தாலும், 1994&ல் இவர்களது கூட்டணியில் வெளிவந்த ‘அமைதிப்படை’ படம் அரசியல் படத்திற்கு புது இலக்கணம் வகுத்தது. இப்படத்தில் இயக்குனர் மணிவண்ணனும், நடிகர் மணிவண்ணனும் போட்டி போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.

அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மணிவண்ணன் 2001-க்குப் பிறகு இயக்குவதை ஒத்தி வைத்துவிட்டு, நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் இவர் இயக்கி சத்யராஜ் நடித்து வெளிவந்த ‘அமைதிப்படை’யின் இரண்டாம் பாகமான ‘நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த மணிவண்ணன், இன்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இயக்குனர் மணிவண்ணன் மரணமடைந்தார்.

‘ஏனுங்ண்ணா...’ எனும் மணிவண்ணனின் கோவைத் தமிழை இனி அவர் நடித்த படங்களில் மட்டுமே நம்மால் கேட்க முடியும் என்பது தமிழ்சினிமாவிற்கு மட்டுமல்ல, மொத்த தமிழகத்திற்குமே ஈடு செய்ய முடியாத இழப்பு!

அவரின் ஆத்மா சாந்தி அடைய நமது ‘டாப் 10 சினிமா’வும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;