மேன் ஆஃப் ஸ்டீல்

நம்மூர் ‘சக்திமான்’ ரசிகர்களுக்கான படம்!

விமர்சனம் 15-Jun-2013 12:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஊருக்கு ஒரு பிரச்சனைனா... முன்னாடி நின்னு தட்டிக் கேட்கிறவர் ‘ஹீரோ’. மொத்த பூமிக்கும் வர்ற பிரச்சனையை தட்டிக் கேட்கிறவர்தான் ‘சூப்பர்மேன்’.

தொழில்நுட்ப வளர்ச்சியில் பூமியைவிட பலநூறு மடங்கு சக்திவாய்ந்த கிரகம் கிரிப்டான். அப்படிப்பட்ட இந்த கிரகம், ஒரு மிகப்பெரிய அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தன் குழந்தை கேல்-எல்ஐயாவது (ஹென்றி கவில்) காப்பாற்ற வேண்டி, அவனை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் கிரிப்டானின் தலைமை விஞ்ஞானி ஜோர்-எல் (ரஸல் குரே). அதைத் தடுப்பதற்காக ஏற்படும் சண்டையில் தளபதி ஜெனரல் ஸோடு (மைக்கேல் ஷன்னன்) ஜோர்&எல்லை கொன்றுவிடுகிறான்.

ஜோர்-எல்லை கொன்றததற்காக ஜெனரல் ஸோடு மற்றும் அவனது கூட்டாளிகளை நாடு கடத்துகிறது கிரிப்டான் அரசாங்கம். அதேநேரம் கொஞ்சம் கொஞ்சமாக கிரிப்டானும் அழியத் தொடங்க, நாடு கடத்தப்பட்ட இந்தக் கூட்டம் மட்டுமே கிரிப்டான் வம்சத்தில் எஞ்சுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, பூமிக்கு வரும் கேல்&எல், ஒரு விவசாயத் தம்பதியால் கண்டெடுக்கப்பட்டு கிளார்க் கென்ட்டாக பெயர் மாறி வளருகிறான். தான், மனிதர்களைவிட அபார சக்தி கொண்டவனாக இருப்பதை உணர்ந்துகொள்ளும் கிளார்க், தன்னைப் பற்றிய ரகசியத்தைத் தன் தந்தையிடம் இருந்து தெரிந்து கொள்கிறான். தான் ஒரு வேற்றுகிரகவாசி என்று தெரிந்தால், இந்த மக்கள் தன்னை ஒதுக்கிவிடுவார்களே என அஞ்சி, தன் சக்திகளை மறைத்து வாழத் தொடங்குகிறான்.

கிளார்க் வளர்ந்து பெரியவனாகும்போது அவனுக்கும், மொத்த பூமிக்கும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஒன்று வருகிறது. கிரிப்டான் அழிவிலிருந்து தப்பித்த ஜெனரல் ஸோடு தன் சக்திகள் அனைத்தையும் திரட்டி, பூமியிலுள்ள மக்களைக் கொன்று, அங்கே கிரிப்டானை அமைக்கத் திட்டமிடுகிறான்.

பிறகென்ன நடந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சுபம்!

‘சூப்பர்மேன்’ முதல் பாகத்தைத்தான் தற்போதைய டெக்னாலஜிக்கேற்ப ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ ஆக மாற்றியிருக்கிறார்கள். கிரிப்டான் கிரகம், அங்கு வசிப்பவர்களின் உடை, பயன்படுத்தும் வாகனம், வேர்ல்டு எஞ்சின், கிரிப்டானின் உயிர்நாடியான ‘கோர்’ என எதை எதையோ காட்டுகிறார்கள். எதையும் நம்ப முடியவில்லை. ஆனால் வாய் பிளந்துகொண்டு பார்க்க வைத்ததன் மூலம் ஜெயித்திருக்கிறார்கள்.

ஆனால், அதற்காக பல கட்டிடங்களை உடைத்துக் கொண்டு, டேங்கர் லாரியில் மோதி வெடித்து வெளிவரும் ஹீரோவுக்கு ஒரு சிராய்ப்புக்கூட ஆகவில்லை என்பதெல்லாம் ரொம்ப டூ மச். ‘டெர்மினேட்டர்’ படத்தில் இப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளை நம்பும்படி அற்புதமாகக் காட்டியிருப்பார்கள். அர்னால்டின் முகம் பாதி வெந்துபோய் அவர் எஃகு முகம் தெரியும் காட்சிகளுக்கெல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது.

அதேபோல், ஜோர்-எல்லை ஒரு கத்தியை வைத்து குத்தி சாகடிக்கும் ஜெனரல் ஸோடு, சூப்பர்மேனைக் கொல்வதற்கு ஏன் இவ்வளவு பாடுபடுகிறார் என்பது இயக்குனர் ஸேக் ஸ்னைடருக்கே வெளிச்சம்.

லாஜிக் பார்க்காமல் சென்றால், ‘சூப்பர்மேனி’ன் மேஜிக்கை ரசித்துவிட்ட வரலாம். மொத்தத்தில் இந்த ‘மேன் ஆஃப் ஸ்டீல்’, நம்மூர் ‘சக்திமான்’ ரசிகர்களுக்கான படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

;