பிரம்மாண்டமாக நடந்த ‘டாப் 10 டாக்கீஸ்’ குறும்பட திருவிழா!

பிரம்மாண்டமாக நடந்த ‘டாப் 10 டாக்கீஸ்’ குறும்பட திருவிழா!

செய்திகள் 10-Jun-2013 11:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நமது ‘டாப் 10 சினிமா’ மாதமிருமுறை இதழின் மூன்றாம் ஆண்டை கொண்டாடும் வகையிலும், திறமைசாலிகளை அடையாளம் கண்டு, அவர்களை கௌரவிக்கும் நோக்கத்தோடும் துவங்கியிருக்கும் புது முயற்சி ‘டாப் 10 டாக்கீஸ்’ குறும்பட திருவிழா. கடந்த ஒரு சில மாதங்களாக நமது இதழிலும், இணையதளத்திலும் இந்த விழா சம்பந்தமான செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இந்த விழா சம்பந்தமான அறிவிப்புகள் வெளியானதும், ஏராளமானோர் உற்சாகத்துடன் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் பொருட்டாக தங்களது படைப்புகளை அனுப்பி வைத்திருந்தனர். போட்டிக்காக மொத்தம் 120 குறும்படங்கள் பெறப்பட்டன. இந்த 120 குறும்படங்களையும் திரையிட்டு பார்த்த ‘டாப் 10 சினிமா’ நடுவர் குழுவினர் அதிலிருந்து 10 சிறந்த குறும்படங்களை தேர்வு செய்தனர்.

எதை தேர்வு செய்வது, எதை நிராகரிப்பது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் படியாக ஒவ்வொரு குறும்படத்திலும் ஒவ்வொரு வகையிலான திறமைகளை காட்டியிருந்தனர் அதன் படைப்பாளிகள்.

தேர்வான அந்த 10 குறும்படங்கள் சம்பந்தமான விவரங்கள் சென்ற ‘டாப் 10 சினிமா’ இதழிலும், இணையத்திலும் வெளியிட்டிருந்தோம். அந்த 10 குறும்படங்களிலிருந்து பரிசுக்குரிய சிறந்த மூன்று குறும்படங்களை தேர்வு செய்து, விருதுகள் வழங்குவதற்காக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கான விழா நேற்று மாலை சென்னையிலுள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவ்யூ தியேட்டரில் நடைபெற்றது.

அந்த நடுவர் குழுவில் ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தை இயக்கி, தேசிய விருது பெற்ற சீனுராமசாமி, ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன், ‘அட்டகத்தி’ படத்தின் இயக்குனர் ரஞ்சித், ’சூது கவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமரசாமி, ‘தடையற தாக்க’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘பீட்சா 2’ படத்தை இயக்கி வரும் தீபக், இசை அமைப்பாளர் தரண், ’ஸ்டுடியோ க்ரீன்’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, யு.டி.வி. நிறுவன முதன்மை அதிகாரி தனஞ்செயன், ’சிங்கம் 2’ படத்தின் தயாரிப்பாளர் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லக்ஷ்மன் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

விழா சரியாக மாலை 5 மணிக்கு ஆரம்பமாக, போட்டிக்காக தேர்வாகியிருந்த 10 குறும்படங்களில் ஒன்பது குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதில் ’அன்புடன் ஜீவா’ என்ற ஒரு குறும்படம் ஏற்கனவே வேறு சில விழாக்களில் திரையிடப்பட்டு, விருது பெற்றிருந்த தகவல் விழாக் குழுவினருக்கு கடைசி நேரத்தில் கிடைத்துவிட, விழா விதிமுறைகளின் படி அந்த குறும்படத்தை திரையிடுவதை தவிர்த்தோம்.

தொடர்ச்சியாக திரையிடப்பட்ட ஒன்பது குறும்படங்களையும் பார்த்த நடுவர் குழுவினர், அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடத்திய விவாதத்திற்குப் பிறகு விருதுக்குரிய குறும்படங்களை தேர்வு செய்து, விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:

சிறந்த குறும்படமாக ரா. பச்சமுத்து இயக்கிய, ‘மூன்றாம் தமிழ்’ தேர்வாக, அதற்கு ரூபாய் 30,000 ரொக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டது.

இரண்டாவது சிறந்த குறும்படமாக ரானா இயக்கிய ‘குரங்கு’ தேர்வு செய்யப்பட, அதற்கு ரூபாய் 20,000 மற்றும் விருது வழங்கப்பட்டது.

மூன்றாவது சிறந்த குறும்படமாக, ‘மிஷன் திருவான்மியூர்’ தேர்வாக இதனை இயக்கிய ஹரி ரூபாய் 10,000 மற்றும் விருது பெற்றுக்கொண்டார்.

இந்த முக்கியமான மூன்று விருதுகள் தவிர திரையிடப்பட்ட மீதி 6 படங்களுக்கு தலா ரூபாய் 5000 ஊக்க பரிசாக வழங்கப்பட, சிறப்பு பிரிவுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு.

சிறப்பு நடுவர் விருது : கோணல் சித்திரம்.

சிறந்த பொழுதுபோக்கு படம் : ச்

சிறந்த நடிகை ; உமா (ஃபிப்ரவரி-4)

சிறந்த கதை : மூன்றாம் தமிழ் (ரா.பச்சமுத்து)

சிறந்த திரைக்கதை ; மூன்றாம் தமிழ் (ரா.பச்சமுத்து)

சிறந்த இயக்குனர் : ரா.பச்சமுத்து (மூன்றாம் தமிழ்)

சிறந்த வசனம் : மகாவிதுரன் (ச்)

சிறந்த இசை: ஜோன்ஸ் (குரங்கு)

சிறந்த படத்தொகுப்பு : ரானா (குரங்கு)

சிறந்த ஒளிப்பதிவாளர் : ஸ்ரீபாத் ஸ்ரீதர் (கேசரி)

இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ‘டாப் 10 சினிமா’ ஆசிரியர் ரா.தங்க பிரபாகரன் வரவேற்க, புகழ்பெற்ற ரேடியோ ஜாக்கி தீனா விழாவினை கலகலப்பாக தொகுத்து வழங்கினார். ‘டாப் 10 டாக்கீஸ்’ சார்பில் நடந்த இந்த குறும்பட திருவிழா, வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - டிரைலர்


;