குட்டிப் புலி

‘குட்டிப் புலி’... சுவாரஸ்யமில்லாத பாய்ச்சல்!

விமர்சனம் 30-May-2013 4:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஊருக்காக அரிவாள் தூக்கிய தன் கணவன் உயிரை மாய்த்துக்கொள்ள, அதேபோல் தன் மகனும் ஆகிவிடக்கூடாது என தாய் நினைக்கிறாள். ஆனால், ‘தந்தை வழியே தன் வழி’ என மகனும் கிளம்பினால் என்ன ஆகும் என்பதே ‘குட்டிப் புலி’.

ஊருக்குள் சண்டியராக சுத்திக் கொண்டிருக்கும் தன் மகன் குட்டிப் புலிக்கு (சசிகுமார்), ஒரு திருமணத்தை செய்து வைத்தால் சராசரி மனிதனாக மாறிவிடுவான் என, அவனுக்கு பெண் பார்க்கிறார் அம்மா சரண்யா பொன்வண்ணன். தன் தாயை தவிக்கவிட்டு இறந்துபோன தன் தந்தையைப் போல, தானும் அடி தடி என்று சுற்றுவதால், அவள் நிலைமை வேறொரு பெண்ணிற்கு வரக்கூடாது என திருமணத்தை வெறுத்து வீட்டை விட்டு வெளியே தங்குகிறான் குட்டிப் புலி. அதே ஊருக்கு புதிதாகக் குடிவரும் பாரதி (லக்ஷ்மி மேனன்), குட்டிப் புலியின் பெண்களை மதிக்கும் குணத்தைக் கண்டு அவனிடம் காதல் கொள்கிறாள். பெண்களையே நிமிர்ந்து பார்க்காத குட்டிப் புலியிடம், காதலைச் சொல்ல வரும் நேரத்தில் ஏற்கெனவே குட்டிப் புலியால் அடிவாங்கிய கூட்டம் ஒன்று அவனை வெட்டிச் சாய்க்கிறது. பிறகு வழக்கமான தமிழ்சினிமா போல் இதிலும் ஹீரோ பிழைத்துக் கொள்கிறார்.

பாரதியின் காதலை குட்டிப் புலி ஏற்றுக் கொண்டானா? அவனைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை குட்டிப் புலி என்ன செய்கிறான் என்பதை படத்தின் பின்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்...

அழகான கிராமம், கிராமத்து மனிதர்களின் இயல்பான குணம் என காட்சிப்படுத்தியதில் மட்டுமே இயக்குனர் முத்தையா தன் அறிமுக முத்திரையைப் பதித்திருக்கிறார். முன்பாதியில் கொஞ்சம் அலட்டல், அடிதடி, காமெடி, அம்மா சென்டிமென்ட், சசியின் கலாட்டா என சுவாரஸ்யமாகச் செல்லும் ‘குட்டிப் புலி’, பின்பாதியில் இலக்கில்லாமல் பாய்கிறது. சொல்ல வேண்டிய கதையிலிருந்து விலகி இழுத்தடிக்கும் காதல் காட்சிகள், தேவையில்லாத காமெடி, சம்பந்தமில்லாத பாடல் என இரண்டாம் பாதி போர். அதேபோல் க்ளைமேக்ஸிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஏற்கெனவே நாம் பார்த்துப் பார்த்து பழகிய அதே அலப்பறையான சசி, இதிலும் தொடர்ந்திருக்கிறார். அம்மா வேடம் என்றால் ரிகர்சல்கூடத் தேவையில்லை, நேரடியாகவே சரண்யா பொன்வண்ணனை நடிக்க வைக்கலாம் எனச் சொல்லும் அளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார் சரண்யா. இப்படத்தைப் பொறுத்தவரை ஹீரோ சசியைவிட இவருக்கே அதிக ஸ்கோப். லக்ஷ்மி மேனனுக்கு இந்தப் படத்தில் பெரிதாக ஒன்றும் வேலையில்லை. சசிகுமாரை பார்க்கிறார்... பார்க்கிறார்.... பார்த்துக் கொண்டே இருக்கிறார் அவ்வளவுதான்! காமெடிக்காக இறக்கிவிடப்பட்டிருக்கும் ‘கனா காணும் காலங்கள்’ டீம் ரசிகர்களை ஆங்காங்கே உற்சாகப்படுத்தியுள்ளது.

படத்தின் பெரிய பலவீனம் எடிட்டிங்கும், இசையும்தான். 2 மணி நேரத்தில் சொல்ல வேண்டிய கதையை, 2.30 மணி நேரத்திற்கு இழுத்தடித்திருக்கிறார்கள். அதேபோல், பல காட்சிகளில் எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை ஒலிக்கவிட்டு ஒப்பேத்தியிருக்கிறார் இசையமைப்பாளர். ‘அருவாக்காரன்...’ பாடலில் மட்டுமே இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிகிறார். ஒளிப்பதிவு ஓகே ரகம்.

முழுக்க முழுக்க பெண்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் முத்தையா. அதில் ஓரளவு வெற்றி கண்ட இயக்குனர் சசியின் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டார்.

ப்ளஸ் : சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு, வசனம், காமெடிக் காட்சிகள்

மைனஸ் : திரைக்கதை, எடிட்டிங், இசை

மொத்தத்தில்... : ‘குட்டிப் புலி’... சுவாரஸ்யமில்லாத பாய்ச்சல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;