ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 6

உடனே தியேட்டருக்கு நடையைக் கட்டுங்கள்... ஸாரி ஓடுங்கள்!

விமர்சனம் 27-May-2013 12:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்ட்ரீட் ரேஸ்’ கான்செப்டை வைத்து, 2001ல் வெளிவந்த ‘தி ஃபாஸ்ட் அன்ட் தி ஃபியூரியஸ்’ படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து வரிசையாக அதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளிவந்து வெற்றி பெற்றன. தற்போது அதன் 6ம் பாகம் ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 6’ம் வெளிவந்திருக்கிறது. பலத்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களின் நம்பிக்கையை தக்கவைத்துள்ளதா எனப் பார்க்கலாம்...

ஐந்தாம் பாகத்தின் முடிவில் தாங்கள் கொள்ளையடித்துவிட்டு வந்த 100 மில்லியன் டாலர்களைப் பகிர்ந்துகொண்டு, சந்தோஷமாக பொழுதைக் கழித்து வருகின்றன டாம் (வின் டீசல்) அன்ட் கோவினர். அதேசமயம், உலகின் முக்கிய நாடுகளில் ராணுவத்திற்கு சொந்தமான சில கம்ப்யூட்டர் ‘சிப்’களை திருடும் ஷா (லூக் இவான்ஸ்) தலைமையிலான தீவிரவாத கும்பல் ஒன்றை கண்டுபிடிக்க வேண்டி, டாம் அன்ட் கோவின் உதவியை நாடி வருகிறார் கமாண்டோ ஆபிஸர் ஹோப்ஸ் (வெய்ன் ஜான்சன்). முக்கியமாக, அந்தக் கொள்ளைக் கும்பலில் டாமின் காதலி லெட்டியும் (மிச்செல்லி ரோட்ரிகீஷ்) (4ம் பாகத்தில் இறந்து போனதாக காட்டியிருப்பார்கள்) இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுறுகிறான் டாம். லெட்டியை மீட்பதற்காகவே அந்த வேலையைச் செய்ய சம்மதிக்கிறான்.

பிரையன் (பால் வாக்கர்), ரோமன் (டையர்ஸ் கிப்ஸன்), ஹான் (ஸங் காங்), கிஸ்லி (கால் கடாட்), தேஜ் (லுடாக்ரிஸ்) போன்ற தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு ஹோப்ஸுடன் புறப்படுகிறான் டாம். இந்த வேலையை தாங்கள் செய்துமுடிவிட்டால், தங்கள் மேல் உள்ள எல்லா வழக்குகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும், அதோடு லெட்டியையும் தங்களிடம் அனுப்பிவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு ஷாவைப் பிடிக்கக் கிளம்புகிறது ஸ்ட்ரீட் ரேஸ் குழு.

லெட்டி எப்படி உயிர் பிழைத்தாள்? அவள் ஏன் ஷாவிடம் போய்ச் சேர்ந்தாள்? அந்தக் கும்பல் எதற்காக கம்ப்யூட்டர் சிப்களை திருடுகிறது? டாம் அன்ட் கோவின் உதவியுடன் கமாண்டோ ஆபிஸர் ஹாப்ஸ் அவர்களைப் பிடித்தாரா? என்பன போன்ற பல கேள்விகளுக்கான பதிலை, அனல் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

லாஜிக்கைப் பற்றி யோசிப்பதற்கெல்லாம் ரசிகர்களுக்கு நேரம் கொடுக்காமல் பர பர ஆக்ஷன் காட்சிகளோடும் மயிர்கூச்செறியும் சாகங்களோடும் திரைக்கதை அமைத்தக் கொடுத்த கிறிஸ் மோர்கனின் பங்களிப்பை சரியாகக் கையாண்டு ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் லின். ரசிகர்கள், இந்தப் படத்தில் இதைத்தான் எதிர்பார்த்து வருவார்கள் என்ற இயக்குனரின் எண்ணம் மிகச்சரியானதுதான் என்பது, படம் பார்க்கும்போது எழுந்த கைதட்டல்களும், கரகோஷங்களும் நிரூபிக்கின்றன.

படத்தின் ஆரம்பக்காட்சியில் டாமும், பிரையனும் மலைப்பாதையில் செல்லும் கார் ரேஸிங்காகட்டும், அத்தனை பேரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு வில்லன் ஷா தப்பிக்கும் அந்த சேஸிங் காட்சிகளாகட்டும், டேங்கரை வைத்து எதிர்வரும் கார்களையெல்லாம் நாசம் செய்யும் காட்சியாகட்டும், தூக்கிவீசப்பட்ட லெட்டியை பறந்துசென்று பிடித்து காப்பாற்றும் டாமின் ஆக்ஷன் காட்சியாகட்டும்... இப்படி பல காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது.

வில்லன் ஷாவும், டாமும் சந்திக்கும் ஒரு காட்சியில், தூரத்திலிருக்கும் தன் ஆள் ஒருவன் மூலம் லேஸர் துப்பாக்கியால் டாமைக் குறி வைக்க, பதிலுக்கு தூரத்திலிருந்து ஹேப்ஸின் லேஸர் ஷாவைக் குறிபார்க்க... மொத்த தியேட்டரும் அலறுகிறது ‘பாட்ஷா.. பாட்ஷா’ என!

குறையென்று பார்த்தால் பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகளில் நிறைய குளோஸ்-அப்களை வைத்திருப்பதால், முழுவதுமாக நம்மால் அந்தக் காட்சிகளை ரசிக்க முடியவில்லை. அதேபோல், க்ளைமேக்ஸில் கார்களை வைத்தே விமானத்தை தரை தட்ட வைப்பதெல்லாம் போங்கு ஆட்டம்!

முக்கியமாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒருவர், படம் முடிந்தபிறகு திரையில் தோன்றி, ‘அடுத்த பாகத்தில் வந்து அசத்துகிறேன்’ எனக் கிளம்பிவிட்டார். 7ம் பாகத்தில் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் ஜேசன் ஸ்டதேம்.

ஷா எனும் புது வில்லன், உயிர்பெற்று வந்த லெட்டி, ஹானைக் காப்பாற்ற உயிரைக் கொடுக்கும் கிஸ்லி, ஜேசன் ஸ்டேதமின் என்ட்ரி, சில எதிர்பாராத ட்விஸ்ட், ஆங்காங்கே ‘ஹாட்’ கேர்ஸ், நறுக்குதெறித்தாற்போன்ற காமெடி வசனங்கள் இவற்றோடு கார்களையும் விமானத்தையும் வெடிக்க வைத்து வெற்றி கண்டிருக்கிறார்கள் ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 6’ படக்குழுவினர்.

ரேஸை நேரில் பார்ப்பதே த்ரில்லிங்தான்... பர பர ரேஸில் முதலிடத்தைப் பிடித்த காரில் பயணித்துவிட்டு இறங்கினால் எப்படி இருக்கும்? பிறகென்ன... உடனே தியேட்டருக்கு நடையைக் கட்டுங்கள்... ஸாரி ஓடுங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

அடுத்த பதிவு

;