நேரம் - திரைவிமர்சனம்

‘நேரம்’ இருந்தால் ஒருமுறை பார்க்கலாம்!

விமர்சனம் 17-May-2013 7:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’’கெட்டநேரம் தொடர்ந்து வர்றது, நல்ல நேரத்துக்காகத்தான்’’ என்ற ‘நச்’ வரியை, திரைக்கதையாக விவரிக்கிறது ‘நேரம்’.

நிதின் - நஸ்ரியா இருவரும் காதலர்கள். வட்டிக்குப் பணம் கொடுத்து, மிரட்டி உருட்டும் வில்லன் ‘வட்டி ராஜா’ இந்த மூவர்தான் கதையின் முக்கிய புள்ளிகள்… ஒரு இக்கட்டான சூழலில், நாயகன் நிதின் ‘வட்டி ராஜா’விடம் கடன் பெற, ஆரம்பிக்கிறது பிரச்சனை. வேலையில்லாததால் அங்கும் இங்கும் பணத்தைப் புரட்டி, சில மாதங்களுக்கு ‘வட்டி ராஜா’வைச் சமாளிக்கும் நாயகனுக்கு, அடுத்த வட்டிப் பணம் கட்டும் நாளில் ஆரம்பிக்கிறது கெட்டநேரம். ‘இன்னைக்குள்ள வட்டிப் பணத்தைக் கொடுக்கலைன்னா, நடக்குறதே வேற’ என ’வட்டி ராஜா’ சவால் விடவே, நண்பனிடம் உதவி கேட்கிறான் நாயகன். அதேநாளில் நாயகிக்கு வீட்டில் பிரச்சனை என்பதால், ‘உன் கூடவே வந்துட்றேன்’ எனக் கிளம்பி, தெருவில் நிற்கிறாள்.

இந்த சமயத்தில், நஸ்ரியாவின் நகையை பறித்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன்… நடந்த விபரத்தை நாயகன் நிதினிடம் சொல்வதற்குள், நாயகனிடமிருந்து ‘வட்டி ராஜா’வுக்குக் கொடுக்க வைத்திருந்த பணத்தை அடித்துக்கொண்டு ஓடுகிறான் இன்னொருவன். சில நிமிடங்களில் நடக்கும் இந்த இக்கட்டான நேரத்தினை நாயகன் எப்படிக் கடக்கிறான்? அவனது கெட்டநேரம் எப்படி நல்ல நேரமாக மாறுகிறது? என்பதை, காமெடி, எமோஷன் கலந்த கலவையாகக் கொடுக்கிறது ‘நேரம்’.

நாயகன் நிதின், நாயகி நஸ்ரியா, வில்லன் ‘வட்டி ராஜா’வாக வரும் சிம்ஹா மற்றும் போலீஸ் கேரக்டர், தம்பிராமையா, சிறப்புத் தோற்றத்தில் வரும் நாஸர், நிதினின் நண்பன்… என படத்தின் அனைத்து கேரக்டர்களும் அருமையான தேர்வு, அதற்குத் தகுந்தாற்போல் அனைவரும் திருப்தியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள். நிதின் - நஸ்ரியாவின் காதல், நஸ்ரியாவின் அழகு, நாஸர் மற்றும் போலீஸ்காரரின் காமெடியான வசனங்கள், ‘வட்டி ராஜா’வின் அடாவடி, என படத்தின் பல இடங்கள் அப்ளாஸ்!

ஆரம்பத்தில் எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கும் திரைக்கதை, போகப்போக எதிர்பார்க்கும் காட்சிகளோடு கடந்துபோவது மைனஸ்… தவிர, படத்தின் கதையும் சரி, திரைக்கதையும் சரி… குறுகிய கால அளவில் நடப்பதுபோல் இருப்பதும், அதை இரண்டு மணி நேரத்திற்கு வளர்த்திருப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், விறுவிறுப்பாக ஒன்றரை மணி நேரத்தில் சொல்லவேண்டிய சுவாரஸ்யத்தினைக் குறைத்திருப்பதால், நேரத்தின் முக்கியத்துவம் கொஞ்சம் விலகியே நிற்கிறது. தவிர, படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது எடிட்டிங்… இன்னும் கொஞ்சம் கத்தரி வைத்திருந்தால், படத்தின் லெவல் வேறாக இருந்திருக்கும்! சில காட்சிகள் ஸ்லோ-மோஷனில் காட்டும்போது அமர்க்களமாக இருந்தாலும், படத்தின் பெரும்பாலான இடங்களில் ஸ்லோ-மோஷன் காட்சிகளைப் புகுத்தியிருப்பது போர்…!

ஒரு காதல் மெல்லிசை, ஒரு கலக்கல் குத்து… என நிறையும் இல்லாமல், குறையும் இல்லாமல் பாஸ் மார்க்கில் நிற்கிறது இசை. நிதின் - நஸ்ரியாவின் காதல் காட்சிகள், அடிக்கடி வரும் ஸேஸிங் காட்சிகள், படம் முழுவதும் தொடரும் பல லொக்கேஷன்கள்… என அனைத்து இடங்களையும் ரசிக்கவைத்திருக்கிறது ஒளிப்பதிவு.

மொத்தத்தில், கதையை சீரியஸாகக் கையாள்வதா? காமெடியாகக் கையாள்வதா? என குழம்பியிருக்கிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். நடிகர்கள் தேர்வு, அவர்களை நடிக்க வைத்த விதம், தேர்ந்தெடுத்த கதை… என சில இடங்களில் அதிகமாக ஸ்கோர் செய்வதால், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வரவேற்கத்தக்கவர்!

ப்ளஸ் : நட்சத்திரங்களின் நடிப்பு, வசனங்கள், ’பிஸ்தா’ பாடல். ஒளிப்பதிவு

மைனஸ் : திரைக்கதை, பல இடங்களில் முரண்பட்டு நிற்கும் ‘லாஜிக்’ கேள்விகள், படத்தொகுப்பு

மொத்தத்தில்… : ‘நேரம்’ இருந்தால் ஒருமுறை பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;