‘எபிக்’ ஹாலிவுட் அனிமேஷன் 3டி பட விமர்சனம்

‘எபிக்’ உலகிற்குள் குழந்தைகளுடன் சென்றுவரலாம் தாராளமாக!

விமர்சனம் 16-May-2013 2:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, அனிமேஷன் திரைப்படங்கள் என்பது, பந்தயம் கட்டினால் நிச்சயம் ஜெயிக்கும் என நம்பிக்கை தரக்கூடிய ஒரு வெற்றிக் குதிரை! அந்த வரிசையில், டிவென்டியத் செஞ்சுரி பாக்ஸ், ப்ளு ஸ்கை ஸ்டுடியோஸ் தயாரித்து இயக்குனர் கிறிஸ் வெட்ஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்திருக்கும் அனிமேஷன் 3டி படமான ‘எபிக்’ எப்படி?

வில்லியம் ஜோய்ஸ் எழுதிய ‘தி லீஃப் மென் அன்ட் தி பிரேவ் குட் பக்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தை அடிப்டையாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கிறது ‘எபிக்’கின் திரைக்கதை. நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் முடிவில் வழக்கம்போல் நல்லவர்கள் ஜெயிக்கிறார்கள் என்பதைத்தான் இந்த ‘எபிக்’கும் நமக்குச் சொல்ல வந்திருக்கிறது.

அனிமேஷன் 3டி படம்தான் நிறைய பார்த்துவிட்டோமே என சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்! கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே கனவு காண வைக்கிறது இந்த ‘எபிக்’... உங்கள் செல்லக் குழந்தையின் கனவில் தோன்றும் அழகிய கற்பனை உலகத்தைக் காணும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் எவ்வளவு குதூகலமாய் இருக்கும்? இந்த ‘எபிக்’கும் உங்களை அப்படி ஒரு உலகிற்குள் அழைத்துச் செல்லவே வந்திருக்கிறது. கொஞ்சம் உள்ளே சென்று அதனை ரசித்துவிட்டு வரலாம்... வாருங்கள்!

உற்சாகம், தன்னம்பிக்கை, தைரியம் நிறைந்த 17 வயது சுட்டிப் பெண் மேரி கேத்தரின்... சுருக்கமாக ‘எம்.கே.’. மகள் கேத்தரினையும், அவளது அம்மாவையும் விட்டுப்பிரிந்து, ஒரு அடர்ந்த காட்டில் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் அப்பா பாம்பா. அவருக்குத் துணையாக செல்ல நாய்க்குட்டி ‘ஆஸி’. இவர்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் அழகிய திரைக்காவியம்தான் ‘எபிக்’.

இவர்களைத் தவிர, வேறு இரண்டு சாம்ராஜ்யங்களும் அந்த காட்டிற்குள் நடந்து கொண்டிருக்கிறது. பசுமையைத் தங்கள் ஆடை அணிகலன்களாகவும், பறவைகளைத் தங்களது வாகனங்களாகவும் கொண்ட நல்லவர்கள் கூட்டம் ஒன்று. இவர்களை எப்படியாவது அழித்து அந்த மொத்த காட்டையும் தங்கள் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கும் பசுமை வெறுக்கும் கொடூர வில்லன் கூட்டம் இன்னொன்று. நல்லவர்களை ராணி தாரா வழிநடத்துகிறாள். கெட்டவர்களை செயல்படுத்தும் தலைவனாக வில்லன் மான்ட்ரேக். ‘இன்ச்’ அளவிலேயே உடல் உருவத்தைக் கொண்டிருக்கும் இந்த இரண்டு கூட்டங்களுக்குமிடையே நீண்டகாலமாக நடந்துகொண்டிருக்கிறது ஒரு மிகப்பெரிய போராட்டம். இப்படி ஒரு உலகம் காட்டிற்குள் இருப்பதை தன் ஆராய்ச்சி வழியாக அறிந்துகொள்ளும் புரொபசர் பாம்பா, அதைக் கண்டுபிடிப்பதற்காக நீண்டகாலமாக ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தன் அம்மா இறந்த பிறகு அப்பாவைப் பார்க்க காட்டிற்கு வருகிறாள் எம்கே. ஆனால், மகள் வந்த சந்தோஷத்தைக்கூட பெரிதாக நினைக்காமல் ஆராய்ச்சியிலேயே மூழ்கியிருக்கிறார் புரொபசர் ‘பாம்பா’. தான் ஏங்கிய அன்பு வந்த இடத்தில் கிடைக்காததால் வீட்டைவிட்டு வெளியேற நினைக்கிறாள் எம்.கே. அந்தநேரத்தில் நாய் ஆஸி அவளிடம் விளையாடிக் கொண்டே காட்டிற்குள் ஓடுகிறது. அதைப் பிடிப்பதற்காக பின்தொடர்ந்து செல்லும் எம்.கே., ஓரிடத்தில் ஏதோ வித்தியாமான ஒளி தெரியவும் அந்த இடத்தை நோக்கி குளிந்து பார்க்கிறாள். அங்கே, சிறிய உருவம் கொண்ட பசுமை இனத்தின் ராணி தாரா இறக்கும் நிலையில் கிடக்கிறாள். அவளிடமிருந்து வரும் ஒரு சின்னஞ்சிறு தாமரை மொட்டை கையில் பிடிக்கும் எம்.கே.வும் மந்திரசக்தியால் அவர்களைப் போல உருவம் சுருங்குகிறாள்.

அதேநேரத்தில் ராணியைத் தேடி வரும் பசுமைக்கூட்டத்தின் வீரர்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். உருவம் சுருங்கிய எம்.கே. என்ன ஆகிறாள்? நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்னவாகிறது? புரொபசர் பாம்பா தன் மகளையும், அந்த மாய உலகத்தினரையும் கண்டுபிடிக்கிறாரா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு ‘விழிகள் விரிய விரிய’ திரையில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிறிஸ் வெட்ஜ்.
வில்லியம் ஜோய்ஸின் புத்தக வடிவத்தை மெருகேற்றி, அதற்கு அழகான திரைக்கதை அமைத்து, ஒரு அற்புதமான படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குனர் கிறிஸ் வெட்ஜ். புரொபசர் பாம்பா, மேரி கேத்தரின் எனும் எம்.கே., நாய் ஆஸி, ராணி தாரா, தளபதி ஜென்ரல் ரூனின், அவரது மகன் நோடு, ரகசியங்களைப் பாதுகாக்கும் நிம் கலூ, சேட்டை நத்தைகளான மப் மற்றும் கிரப், வில்லன் மான்ட்ரேக் என ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும், அதன் பாடி லாங்வேஜ், வசன உச்சரிப்பு என பார்த்துப் பார்த்துச் செதுக்கிறார்கள். இசையமைப்பாளர் டேனி எல்ஃப்மேன், ஒளிப்பதிவாளர் ரெனாட்டோ ஃபால்கா, எடிட்டர்கள் ஆன்டி கெய்ர் மற்றும் டிம் என ஒவ்வொரும் படத்தில் மாய மந்திர வித்தைகளைக் காட்டியிருக்கிறார்கள்.

தாமரை இலைகளால் ஆன அழகிய தேரில் ராணி தாராவை சுமந்து கொண்டு வரும் தட்டான் பூச்சிகள், அவர்களுக்குப் பாதுகாப்பாக சுற்றிலும் வரும் பறவை வாகன வீரர்கள் என அந்த ஒரு காட்சி போதும்... மெய்மறக்க வைக்கிறது நம்மை!

நாளை முதல் (மே 17) இந்தியாவிலும், உலகெங்கிலும் மே 24ம் தேதியும் வெளிவருகிறது இந்த ஹாலிவுட் அனிமேஷன் 3டி படம் ‘எபிக்’. தமிழகத்தில் இதனை வெளிவிடுபவர்கள் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’.

ஊட்டி, கொடைக்கானல் என நாள் கணக்கில் செலவழித்து குளிர்பிரதேசங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த கோடைக்காலத்தில், வெறும் 102 நிமிடங்களைச் செலவழித்து ‘எபிக்’ உலகிற்குள் குழந்தைகளுடன் சென்றுவரலாம் தாராளமாக!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;