நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. - திரைவிமர்சனம்.

'நாகராஜ சோழனி'ல் எதிர்பார்ப்பு, ஏமாற்றமே!

விமர்சனம் 11-May-2013 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'அமைதிப்படை' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது 'நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ'. இயக்குனராக மணிவண்ணனின் 50வது படம்... முதல் பாகத்தில் அரசியல் பகடையை அசால்டாக உருட்டி விளையாடிய சத்யராஜ் இதில், துணை முதல்வராக ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். வெளிநாட்டுப் புள்ளிகள் சிலர் ஒரு புராஜெக்ட் விஷயமாக பழங்குடியினர் வசித்துக்கொண்டிருக்கும் மலைப்பகுதியை கூறுபோட முயற்சிக்க, அதற்கு அமாவாசையாகிய சத்யராஜ் கமிஷனுக்காக தலையாட்டுகிறார். இந்த முயற்சியை எதிர்த்து மக்களும், அரசும் எதிர்த்து நிற்க... அதற்குள் குறுக்கு வழியில் புகுந்து முதல்வராகிறார் சத்யராஜ். பிறகென்ன ஆகிறது? என்பதை நக்கலும் நையாண்டியுமாக கொண்டு சென்று எண்ட் கார்டு போடுகிறது 'நாகராஜ சோழன்'.

'அமைதிப்படை'யில் ஹிட் அடித்த அமாவாசையை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். ஆரம்பம் முதல் இறுதிவரை சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணி அட்டகாச அதிரடி...! முழுக்க முழுக்க இன்றைய அரசியல் சரவெடியை அதிரடியாய்க் கொளுத்திப்போடுகிறது அவர்களுக்கிடையேயான உரையாடல்கள். 'நாலு எம்.எல்.ஏ-வை வச்சுக்கிட்டுதானே சட்டசபையில நாக்கைத் துருத்துன...', 'வயசானவன் எல்லாம இளைஞர் அணித் தலைவரா இருக்கும்போது, நீ ஏன் மகளிரணி தலைவர் ஆகக்கூடாது?' என படம் முழுவதும் தொடரும் அரசியல் வசனங்கள் தூள்! தவிர, படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சி, அரசியலின் அசலான முகம்... ஆனால், தெளிவான கதையின்மை, கோர்வையற்ற திரைக்கதை, இடையிடையே வந்துபோகும் ஒட்டாத கேரக்டர்கள் என திரைக்கதையோடு குழப்பங்களும் பின்னோக்கியே வருகிறது. அதிலும், லாரி டிரைவராக வரும் சீமான் சம்மந்தப்பட்ட காட்சிகளை தமிழீழத் தலைவரோடு ஒப்பிட்டு, அச்சு பிசகாமல் உருவாக்கியிருப்பது தேவையில்லாதது. அரசியல்வாதியாக வரும் சத்யராஜின் மகன் ( இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன்) கேரக்டரை இன்னும் கொஞ்சம் வலுவானதாகத் திணித்திருந்தால் கதையும், சுவாரஸ்யமும் இன்னும் பலமடங்கு பெருகியிருக்கும். கதாநாயகிகளாக வரும் இருவரின் நடிப்பும் பழைய வாடை...!

முதல்பாதி வரை காமெடியாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மந்தமாகிவிடுகிறது. இடைவேளையில் என்ட்ரி ஆகும் இன்னொரு சத்யராஜ் கேரக்டர் ( சி.பி.ஐ அதிகாரி ) படத்தையே திசைதிருப்பும் என்று எதிர்பார்த்தால், திரையில் அவரைத் தவிர்த்து பல கேரக்டர்கள் எட்டிப்பார்க்கிறார்களே தவிர, சத்யராஜைக் காணோம்!

படத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், அதில் ஒன்றுகூட மனிதில் ஒட்டவில்லை. ஒளிப்பதிவு, எடிட்டிங்... என படத்தில் டெக்னாலஜி ஏரியாவிலும் எந்தவித மெனக்கெடலும் இல்லை. சுருக்கமாக சொன்னால், சத்யராஜ் - மணிவண்ணனின் கூட்டணியைத் தவிர, 'அமைதிப்படை'யில் மனதைத் தொட்ட அனைத்து விஷயங்களும் இதில் மிஸ்ஸிங்...!

ப்ளஸ் : இன்றைய அரசியலைத் தோலுரிக்கும் வசனங்கள், சத்யராஜ், மணிவண்ணனின் நடிப்பு, வசன உச்சரிப்பு, மேனரிசம். மைனஸ் : திரைக்கதை, படத்தோடு ஒட்டாமல் பயணிக்கும் கேரக்டர்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை. மொத்தத்தில்... : 'நாகராஜ சோழனி'ல் எதிர்பார்ப்பு, ஏமாற்றமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;