பாரதிராஜாவை பேச வைத்த ‘மூடர் கூடம்’

பாரதிராஜாவை பேச  வைத்த ‘மூடர் கூடம்’

செய்திகள் 29-Apr-2013 1:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாண்டிராஜின் ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சிம்புதேவனுடன் பணியாற்றிய, பாண்டிராஜின் அசோசியேட் இயக்குனர் நவீன் இயக்கியுள்ள முதல் படம் ‘மூடர் கூடம்’. நடராஜன் சங்கரன் எனும் புதுமுகம் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கத்தில் இன்று (ஏப்ரல்29) நடைபெற்றது.

இவ்விழாவில், இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், சமுத்திரகனி, மனோஜ்குமார், பாண்டிராஜ், சுசீந்திரன், ராம், சீனு ராமசாமி, திரு, ஏ.எல்.விஜய், சிம்புதேவன், பாலாஜி தரணீதரன் ஆகியோரும் தயாரிப்பாளர்கள் ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, யுடிவி தனஞ்செயன், ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன், ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ சி.வி.குமார் ஆகியோரும், பாடகர்கள் யேசுதாஸ், பாடலாசிரியர் யுகபாரதி, நடிகர்கள் விமல், சிவகார்த்திகேயன், ஜெயபிரகாஷ் மற்றும் நடிகைகள் பிந்துமாதவி, ஓவியா, சிந்து ரெட்டி உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

இப்படத்தின் பாடல் சிடியை கே.ஜே.யேசுதாஸ் வெளியிட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். 1963-ல் ‘பொம்மை’ படத்தில் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை...’ என்ற பாடலைப் பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். தான் பாடிய இந்த பாடலை கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்து ‘மூடர்கூடம்’ படத்திற்காக மீண்டும் பாடியுள்ளார் யேசுதாஸ்.

சமீபகாலமாக விழா மேடைகளில் பேசுவதைத் தவிர்த்து வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, இப்படத்தின் டிரைலர் காட்சிகளைப் பார்த்து வியந்துபோய், ‘‘நான் சமீபமா எந்த விழா மேடையிலயும் அதிகமா பேசுறது கிடையாது. ஆனா, இந்தப் படத்தோட டிரைலரைப் பார்த்துட்டு என்னால பேசாம இருக்க முடியல. இந்தப் படத்தோட காட்சிகள் ஏதோ புதுசா இருக்கு. இந்தப் படம் ரொம்ப நல்லா வரும்’’ என்று பேசிவிட்டு அமர்ந்தார். ‘பாரதிராஜாவை பேச வச்சுட்டாங்களே’ன்னு விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;